உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

15

என்பதையும் அறிவார்' அவ்வாறு கூறார். ஆகலின் தகடூர் யாத்திரையில் குறிக்கப்பெறும் அதியமான், அதியமான் நெடுமான் அஞ்சி'யின் வேறான ஒருவன் என்பது ஒருதலை. அவ் வேறுபாடு உணரு மாறே “அதியமான் எழினி' என்னும் பொதுப்பெயர் அளவில் நில்லாமல், “அதியமான் தகடூர்ப் பொருது வீழ்ந்த எழினி” என்றார் என்க.

தகடூர் வெற்றிகொண்ட சேரமானுக்குச் 'சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை' எனப் புகழ்ப்பெயர் சூட்டிய சான்றோரே, அத் தகடூர்ப் போரில் வீழ்ந்து பட்டானை வெளிப்படக் குறிக்க “தகடூர்ப் பொருது வீழ்ந்த எழினி” எனக் குறித்தார் எனக் கொள்க.

தகடூர்ப் போர்

தகடூர்ப் போரைப்பற்றி அறிதற்குக் கருவியாக இருப்பவை பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்தும், தகடூர் யாத்திரையில் கிடைத்துள்ள பாடல்களும், தொல்காப்பிய நச்சினார்க்கினியர் உரையுமேயாம். இவற்றால் அறியக்கிடக்கும் செய்தியும் குறிப்பால் நோக்கி உணரத்தக்கதை அன்றி வெளிப்படையான தன்றாகும். ஆயினும் சில அரிய குறிப்புகளை அவை வழங்குகின்றன.

பதிற்றுப்பத்தில் கிடைத்துள்ள எட்டுப் பத்துகளிலும் தகடூர்ப் போர் 2ஒரே இடத்திலேயே சுட்டப்பெறுகின்றது. அதற்குரிய விளக்கத்தைப் 3பதிகம் தருகின்றது.

சேரவேந்தர் குடியைச் சேர்ந்தவராகக் கருதுமாறே வாழ்ந்தவர் அதியர். அவர்க்குக்கீழ்க் குறுநில மன்னராகவும் படைத் தலைவராகவும் விளங்கியமையால் அவர்தம் அன்புக்கும், அரவணைப்புக்கும் உரியவராய் விளங்கினர். பனம்பூ மாலையைத் தாமும் அணிந்தனர். 4பல்யானைச் செல்கெழுகுட்டுவனும், 5ஆடு கோட்பாட்டுச் சேரலாதனும், “மழவர் மெய்ம்மறை என்று சான்றோரால் புகழப்பெற்றனர். மழவர்க்கு மெய்ம் மறையாக (கவசமாக) விளங்குபவர் என்பது இதன் பொருள். இதற்கு ஏற்பவே சேரர்பால் அதியர் அன்பொடும், நண்பொடும் உரிமைக் கடனாற்றி வந்தனர். ஆதலால் பதிற்றுப்பத்தால்

""

1. இவ்விடத்தில் சோழன் நலங்கிள்ளி ஆவூர் முற்றியிருந்த காலத்து, அடைத்திருந்த நெடுங்கிள்ளியைக் கோவூர்கிழார் பாடிய பாடலை (புறம். 44) ஒப்பிட்டுக் கண்டு வேறுபாடு அறிதல் தக்கது.

2.

பதிற். 78. 3. பதிற். எட்டாம் பதிகம். 4. பதிற். 21:24. 5. பதிற். 55 :8.