உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணசாகரர் :

யாப்பருங்கலம்

9

காரிகைக்கு உரைகண்டவர் குணசாகரர். அவரை அமித சாகரரின் ஆசிரியராகக் கருதினாரும் உளர். ஆசிரியர் இயற்றிய நூலுக்கு மாணவர் உரை எழுதும் மரபுநிலை உண்டே யன்றி, மாணவர் யாத்த நூலுக்கு ஆசிரியர் உரை எழுதும் வழக்கம் ல்லை. அன்றியும், “தனக்கு வரம்பாகிய தவத்தொடு புணர்ந்த குணக்கடற் பெயரோன்” என்று அமிதசாகரரால் பாராட்டப் பெற்ற குணசாகரர், “இந்நூல் யாவராற் செய்யப் பட்டதோ வெனின், ஆரியம் என்னும் பாரிரும் பௌவத்தைக் காரிகை யாக்கித் தமிழ்ப்படுத்திய அருந்தவத்துப் பெருந்தன்மை அமித சாகரர் என்னும் ஆசிரியராற் செய்யப் பட்டது” என்று அமித சாகரரை எழுதினார் என்பது பொருந்துவதாக இல்லை. அமிதசாகரர் மேல் அளவற்ற அன்பும், அவர்தம் புலமையையும் தவநெறியையும் உச்சிமேற்கொண்டு ஒழுகுதலுமுடையராய், அவர்க்குப் பின்வந்த குணசாகரர் என்னும் ஒருவரால் இயற்றப் பெற்றது காரிகை உரை என்பதே தகும். தம் தந்தை பெயரை மைந்தர்க்கு இட்டு வழங்கும் வழக்குப் போல் 'அறிவுத் தந்தை யாகிய குணசாகரர் பெயரை இட்டு வழங்கிய அமிதசாகரரின் மாணவருள் ஒருவரே இக்காரிகை யுரை கண்ட குணசாகரர் என்பது ஏற்கத் தக்கது.

கலம் காரிகை - வேறுபாடுகள் சில :

யாப்பருங்கலமும், யாப்பருங்கலக் காரிகையும் ஒரே ஆசிரியரால் இயற்றப் பெற்றனவே எனினும், சிற்சில வேறு பாடுகள் அந்நூல்களில் அமைந்துள, அவை வருமாறு :

1. ஒரு நூலாசிரியர் தம் குருவின் பெயரைத் தம் மாணாக்கருக்கு இடுவது மரபு. சமயத் துறையில் இதை எங்கும் காணலாம். திருக்கடவூரில் இருந்த ஆளுடைய நாயனார் என்பவர் தம் குருவான திருவியலூர் உய்யவந்தார் உபதேதித்த ஞானப் பொருளைத் தம்மாணாக்கருக்கு உணர்த்திய போது, அவருக்குத் தம் குருவின் பெயரையே அமைத்தார்; அவரே திருக்களிற்றுப் படியார் என்ற சைவசாத்திர நூல் செய்த திருக்கடவூர் உய்யவந்தார் என்பவர். இதுபோலவே, பரஞ்சோதி முனிவர் என்பவர் பூமியில் இறங்கிச் சுவேதவனப் பெருமாள் என்ற குழந்தைக்குச் சிவஞானம் உபதேசித்த போது, தம் குருவாகிய சத்திய ஞான தரிசனிகள் பெயரின் தமிழ் வடிவாகிய மெய்கண்டார் என்ற பெயரைத் தீட்சா நாமமாகச் சூட்டினார். இவற்றை ஒப்ப, சைன சமயத்தில் முனிவராயிருந்த அமிதசாகரர் தம் மாணாக்கர் ஒருவருக்குத் தம் குருவின் பெயரான குணசாகரர் என்பதையே சூட்டினார் என்று கருத வேண்டும்.

- தமிழ் இலக்கிய வரலாறு. 11ஆம் நூ.ஆ.பக் : 194-5 திரு.மு.அருணாசலம்