உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

என்பதும் புலப்படும். இவ்வகையில் காரிகை உரையை நோக்க அவர், 'வேறுபடுத்துச் சொல்வாரும் உளர்’ என்பவருள் ஒருவராகத் தோன்றுகின்றார்.

“வான்தளை தட்டு இசை தனதாகியும் வெண்பா இயைந்தும் விசையறு சிந்தடியால் இறுமாய்விடின் வெண்கலியே” என்னும் காரிகைப் பகுதிக்குக், கலித்தளைத் தட்டுக் கலியோசை தழுவியும் வெண்டளை தட்டு வெள்ளோசை தழுவியும் வந்து ஈற்றடி முச்சீரான் இறுமெனின் அது வெண்கலிப்பா என்றும் கலிவெண்பா என்றும் பெயரிட்டு வழங்கப்படும் என்று உரை கூறி, “வாளார்ந்த மழைத் தடங்கண்” என்னும் பாடலைச் சான்று காட்டி” இது தன் தளையானும் துள்ள லோசையானும் வந்து ஈற்றடி முச்சீராய் வெண்பாப்போல் முடிந்தமையின் வெண்கலிப்பா என்றும், “சுடர்த்தொடீஇ கேளாய்" என்னும் பாடலைக் காட்டி "இது வெள்ளோசை தழுவி வெண்டளை தட்டுச் சிந்தடியால் இற்று ஒருபொருள் மேல் வந்தமையால் கலிவெண்பா என்றும் கூறியுள்ளார். இதனால் இரண்டு உரைகளையும் கண்டவர்கள் வர்கள் வேறு

வேறானவர் என்பது விளங்கும்.

""

மேலும், எழுத்து முதலியவற்றைக் காரணக்குறியான் வழங்குமாற்றை,

“எழுதப் படுதலின் எழுத்தே; அவ்வெழுத்

தசைத்திசை கோடலின் அசையே; அசையியைந்து

சீர்கொள நிற்றலிற் சீரே; சீரிரண்டு

தட்டு நிற்றலிற் றளையே; அத்தளை

அடுத்து நடத்தலின் அடியே; அடியிரண்டு

தொடுத்தல் முதலாயின தொடையே; அத்தொடை தூக்கில் தொடர்ந்திசைத்தலின் தூக்கெனப் படுமே”

என்னும் மேற்கோளால் காட்டுகின்றார் விருத்தியுரைகாரர். இதே நூற்பாவைக் காரிகை யுரையாசிரியரும் மேற்கோள் காட்டுகின்றார். ஆனால், அம்மேற்கோள் எட்டடிகளையுடைய தாய், ஏழு எட்டாம் அடிகள்,

“பாவி நடத்தலில் பாவே; பாவொத்

தினமாய் நடத்தலின் இனமெனப் படுமே"

என வருகின்றன.

ஒரே ஆசிரியரால் இரண்டு உரைகளும் எழுதப் பெற்றிருக்கு மாயின் இவ்வேறுபாடு நேர்ந்திருக்காது என்பது கருதத் தக்கது.