உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.’ கலைக்களஞ்சியம்

91

வடிவுற்றார். இக்கதையை ஆய்ந்து வரலாற்று ஆராய்ச்சி என்னும் பகுதியில் சில குறிப்புகளைச் சுட்டுகிறார் கா. சு.

இம்மை, மறுமைப் பயனைக் கருதாமல் இறைவன்பால் அன்பு செலுத்தும் ‘கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்க்கே’ இயல்வதாகலின் அடிகள் அத்தகையர் என்கிறார்.

அடிகள் அருட் செல்வமும், பொருட் செல்வமும் ஒருங்குடையாராய் இல்லறம் நடாத்தினமையால் உலகத்தே இல்லற முறையைத் தமது வாழ்க்கையால் இனிதறிவுறுத்திய பெருமகனார் என்றும், துறவிலும் நின்றவராகலின் இருபெரு நிலையையும் வையகத்தார்க்கு வாக்காலும், வாழ்க்கையாலும் வலியுறுத்தின தனிப்பெருஞ் சால்பினர் என்று கூறுகிறார்.

மருதீசரே மருதவாணராகத் தோன்றினார் என்று கூறப்படும் கதையைக் கருதும் கா. சு, அப்பெயரே மருதீசர் அவதாரம் என்னும் கதை கிளைக்க இடமாகியிருக்கலாம் என்கிறார். தம் செல்வத்தைத் தக்காங்கு அறச்செயலில் செல விடத் தக்கார் இல்லாமையால் யாவர்க்கும் பயன் படும்படி அள்ளிக் கொள்ள அடிகள் ஏவினர் போலும் என்கிறார்.

நஞ்சப்பத்தின் தீமை எவ்வுயிர்க்கும் கேடு செய்யாது வீட்டை மட்டும் எரித்தமை அடிகளின் அருட்பெருக்கேஎன்கிறார். கழுமரம் எரிவித்தது இறைவன் அடிகளாரைக் கொண்டு பத்திரகிரியாரைப் பயன்படுத்தக் கருதிய திருவிளையாட்டு என்கிறார். அடிகள் திருவொற்றியூரிற் சமாதியுற்ற வகை வியப்பானது. இவ்வாறு எப்பெரியாரும் தம் முடிவினைத் தேடிக் கொண்டதாகத் தெரியவில்லை என்கிறார். இத்தகு சமாதி நிலையே கோயிலமைத்து வணங்கத் தக்கது; பிறரைச் சமாதி வைத்து வணங்குதல் இறை வழிபாடும் ஆகாது; அடியர் வழிபாடும் ஆகாது என்கிறார்.

இவ்வாய்வின் நிறைவிலே, “சமாதியில் சிவலிங்க வழிபாடு உண்மையின் சிவலிங்க வழிபாடனைத்தும் சமாதியின் பாற்படு மென்று குழறுவோரது பெரியதோர் பிழையுரையால் உலகம் மயங்குதல் கூடாது. சைவநூல்களிலே சிவலிங்கத்தை நாட்டு மிடத்தை ஆழ அகழ்ந்து எலும்பு முதலிய எவ்வித அழுக்குப் பொருளையும் நீக்கித் தூயதாக்க வேண்டுமென்று விதித்தமை தெளிக” என்கிறார்.

பட்டினத்தடிகள் நூற் கருத்து என்பது விரிவானது (41-65). அவ்வாறே நிலையாமை பற்றி ஆயவும் (66-89) பிறவும் நூற் கருத்துகளே. நூற்கருத்துகளின் சுருக்கத் திரட்டு வருமாறு: