உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

>இளங்குமரனார் தமிழ் வளம் – 14

சிக்காதிருந்தமை அவரது மெய்த்துறவினை யாவர்க்கும் எடுத்துக்காட்டுவ தொன்று. இல்லற நெறியைப் பிழைபட்டதாக அடிகள் கருதாமையாலும் வைதிக நெறி, சைவநெறி என்ற இரண்டையும் உலகினர்க்கு உணர்த்துவான் தோன்றிய பெரு மகன் ஆதலாலும் திருமணம் செய்து ஒரு புதல்வரைத் தந்தவுடன் மனைவி இறக்கப் பெற்று அடிகள் துறவறம் புக்கனர் என்றும், திருமேனி எரிவாய்ப்பட்ட கதை மெய்யாயின் ஒரு வீட்டினில் தூங்குகின்றவன் அவ்வீடு தீப்பற்றி எரியக் கண்டடன், தன்பால் இருந்த வானவூர்தியில் ஏறி, விண்ணிற் செல்வது போல அடிகளும் தமது உடல் வேவக் கண்டவுடன், அதனைத் தமது சித்த நூலறிவால் பாதுகாக்கத் தலைப்படாது சமாதியில் பொருந்திச் சிவத்திற் கலப்பதையே விழைந்தனர் என்பது தெளிவாகலின் அவரது விழுமிய உயர் ஞானத் தகுதியை நாமோ அளந்தறிதல் கூடுமென்று உரைக்கிறார்.

நூலாராய்ச்சி என்னும் பகுதியில் சமயம் என்னும் பொருளைப் பற்றி ஆயும் கா. சு. அடிகள் சமயங்களின் பொது நோக்கத்தையும், வேறுபட்ட கொள்கையினையும், சமய வாதத்தால் வரும் இழுக்கினையும், பல இடங்களில் குறித்ததனோடு அமையாது, அறுவகைச் சமயத்தின் இயல்பினையும், சைவத்தின் சிறப்பினையும், சித்தாந்தத்தின் பெருமையினையும் செவ்விதின் விளக்கியமையை எடுத்து உரைக்கிறார்.

புராணங்களில் கூறும் கடவுளின் அருட்செயல்களை மிகுதியாகக் கூறாது அவரது பொதுவாகிய பெருந்தன்மைகளை எடுத்து விளக்குதலில் தாயுமான அடிகள் இணையற்றவர் என்பதைக் கடவுள் என்னும் பகுதியில் எண்ணற்ற சான்றுகளால் மெய்ப்பிக்கிறார். அவ்வாறே உயிரியல்பு, மனவியல்பு, வினையியல்பு முதலியவற்றையும் விளக்குகிறார்.

என்று கடவுள் உள்ளாரோ அன்றே உயிருண்மை ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலம் உயிர்க்குண்மை, உயிர் சார்ந்ததன் வண்ணமாதல், உயிர்கள் எண்ணற்றவை, உயிர் அறிவிக்க அறியும் இயல்பினது, உயிர் ஏதாவது ஒன்றைப் பற்றி நிற்கும் தன்மையது, உயிர் ஐந்து அவத்தைகளையுடையது என்பன வெல்லாம் உயிரியல்பில் விரித்துரைக்கப் படுகின்றன.

ஐயறிவாகிய ஐம்புலன்கள் வழியாக மனம் செல்லுங் காலை, அது உலகப்பற்றில் ஈடுபடும். மனமே உயிர் உலகத்தை ஆராய்தற்குக் கருவி. எல்லா விதமான நினைவிற்கும் மனம்