உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

இளங்குமரனார் தமிழ் வளம் – 14

மருத்துவர் உடலமைப்பைச் சிறப்பாக அறிந்திருத்தல் வேண்டும். ஆனால், ஒவ்வொருவரும் பொது முறையிலாவது கட்டாயம் அறிந்திருக்க வேண்டும் என்று கூறித் தொடங்கும் கா. சு., உடலுறுப்புகள் பற்றிய அமைப்பு, செயல் விளக்கம் ஆகியவற்றை எளிமையாகச் சுருங்கிய அளவில் எழுதுகிறார். அவர் கூறிய பொது முறையறிவுக்கு அச்செய்திப் போக்கே எடுத்துக் காட்டாகி விடுகின்றது.

குழந்தைப் பருவத்தில் பல்லைப் பற்றிய அக்கறை குழந்தைகளுக்குத் தெரிவதில்லை. பெற்றோர்களுள் பலரும் அதனைக் கருதுவது இல்லை. அதன் விளைவு என்னாகும் என்பது அப்பொழுது தெரிவது இல்லை. பின்னே என்ன ஆகும்?

"நிலைவரமில்லாத பற்கள் குழந்தைகளுக்கு முதலில் முளைக்கும். அவற்றை அடிக்கடி சுத்தப் படுத்த வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் நிலைவரமான பற்கள் உண்டாவதற்கு முன்னே அவை விழுந்து விடும். அவை விழுந்து விட்டால், நிலைவரமான பற்கள் தோன்றும் பொழுது சரியான இடத்தில் முளையாமல் முன் நீண்டும், பின் குழிந்தும், நடுவில் வளைந்தும், தெத்துக் குத்தாய் முளைக்கும்” என்று ஆய்வுரை வழங்குகிறார்

கா. சு. (7).

செயற்கைப் பற்குச்சு (Brush) பயன்படுத்துபவர்கள், அதைப் பயன்படுத்திய பின் அதன் மீது உப்புப் பொடியிட்டு வைத்திருந்து தூய்மைப்படுத்தினால் அதிலுள்ள புழுக்கள் மாயும். நன்கு காய்ச்சின நீரினைக் கொண்டு பல்லைக் கழுவுதல் சிறந்தது. ஒரு பல் அழுகி விட்டால், அதை உடனே பல் மருத்துவர் உதவி கொண்டு எடுத்து விட்டு, அதற்கு வேறு பல் வைத்துக் கொள்ளுதல் நலம் என்றும் கூறுகிறார்.

66

அரத்தமாகிய இரத்தத்தின் சிறப்பு விளங்க உடலியல் அறிஞர்கள் உயிர்த்துளி என அதற்குப் பெயரிட்டதை உரைத்து, ஒரு துளி இரத்தத்தைப் பூதக் கண்ணாடியாற் பார்த்தால் சிறிய உருண்டை போன்ற செவ்வணுக்களும், வெள்ளணுக்களும் காணப்படும். அவை இரத்தக் கால்வாயில் மிதக்கும் மீன்கள் போலக் காணப்படும்" என உருவகக் கண் கொண்டு பார்க்கிறார். மொழிப் புலமையுடையார் துறையறிவும் வல்லாராக இருந்தால் எத்தகு நலமாம் என்பதைக் காட்டும் சான்றுகளுள் ஈதொன்று.

1