உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.' கலைக்களஞ்சியம்

167

பயிற்சியில் புகுந்து சட்ட முதுவர் (M. L) பட்டமும் பெற்றார். இறுதித் தேர்வுக்கு இவர் எடுத்துக் கொண்டது உடைமைச் சட்டம் (Law of Property). இதனைக் கற்க எடுத்துக் கொண்ட காலம் 45 நாள்கள்! இவருக்குப் பதின் மூன்று ஆண்டுகளுக்கு முன்னே ஒரே ஒருவர் மட்டும் இதனைப் பாடமாகக் கொண்டு தேறியிருந்தார்! அரியதும் எளிதாயிற்று தமிழ்க் கா. சு. வுக்கு! அவ்வெளிமையே இவரைத் தாகூர் சட்ட விரிவுரையாளர் (Tagore Law Lecturer) ஆக்கிற்று.

தாகூர் குடும்பத்தவர், கல்கத்தாப் பல்கலைக் கழகத்தில் சட்டத்துறை அறிஞர்க்கென அமைத்துள்ள அறக்கட்டளை ஒன்றுண்டு. அதில், சட்டக்கலை பற்றி மூன்று பொருள்கள் காடுக்கப்படும். அவற்றுள் ஒன்றைப் பற்றிப் பன்னிரண்டு சொற்பொழிவுகள் ஆங்குச் சென்று நிகழ்த்த வேண்டும். அதற்குரிய பரிசுத்தொகை பத்தாயிரம் உரூபா. அப்போட்டி அந்நாளில் இந்தியப் பரப்பனைத்திற்கும் பொதுவானதாக அமைந்திருந்தது. 1920 இல் அப்போட்டியில் குற்றங்களின் நெறிமுறைகள் என்னும் தலைப்பில் Principles of Criminology, பன்னிரு பொழிவுகளாற்றி அப்பரிசினைப் பெற்றார். அது முதல் தாகூர்ச் சட்ட விரிவுரையாளர் என்னும் பெருமையுற்றார். சென்னைக்கு ஒருமுறை வந்த தாகூர் பெருமானும், கா. சு. வின் இருப்பிடம் தேடிச் சென்று கண்டு அளவளாவி மகிழ்ந்தனர். இவை கா. சு. வின் தனித் திறங்கள் என்பதில் தடையுண்டா? சென்னை மாநிலத்தில் முதன் முதலாக இப்பரிசு பெற்றவர் இவரே எனின், இவர் திறம் சொல்லாமலே விளங்குமே.

சட்டக் கல்வித் திறம், தாகூர்ச் சட்ட விரிவுரையாளர் என்பன என்ன செய்தன?

முனிசீப் மன்ற நடுவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அக்கால உயர்நடுமன்ற நடுவர் வில்லியம் பாக்கு எயிலிங்கு என்பார்க்கு இருந்தது. அவர் கா. சு. வின் திறம் அறிந்து முனிசீப் மன்ற நடுவராகக் கா. சு. வைத் தேர்ந்தெடுத்து, திருத்துறைப் பூண்டியில் பதவியேற்க ஆணையிட்டார். அப்பொழுது உயர் மன்ற நடுவருள் ஒருவராகிய அப்துல் ரகீம் என்பார் “நீவிர் தாகூர்ச்சட்ட விரிவுரையாளர்; நும் தகுதிக்கு இப்பதவி எளியது; அரிய பதவி வாய்க்கும்; இதனைக் கொள்ள வேண்டா" என்றார். கா. சு.' வுக்கு இருந்த தேர்ச்சிப் பெருமிதம் அசைத்தது. மீளவும் எயிலிங்கு அழைத்து வலியுறுத்தியும் கா. சு. பதவியைக் கை நழுவவிட்டார்! பின்னர்ச் சட்டக் கல்லூரி நிலைப் பேராசிரியப்

?