உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.' கலைக்களஞ்சியம்

169

சென்னை மாகாணத் தமிழர் மாநாட்டின் வரவேற்புக் கழகத் தலைவராக இருந்தவர் கா. சு. அத் தமிழ்ச் சங்க வாயிலாக வெளிப்பட்ட கலைச் சொல்லாக்கப் பணி மிகச் சீரியதாகும். கா. சு. "பல்கலைப் புலவர்” எனச் சிறப்பிக்கப்பட்டுப் பாராட்டுப் பட்டயம் வழங்கப் பெற்றார். திருநெல்வேலி நகராட்சி உறுப்பினராகப் பொதுப்பணியும், நெல்லையப்பர் திருக்கோயில் அறங் காவலராகத் திருவருட் பணியும் புரிந்த கா. சு. செய்த தமிழ்ப்பணி சாவா வாழ்வு வழங்குவதாம்.

சமயப் பற்றாளர் பலர்க்குத் தனித் தமிழ்ப் பற்று அமைவ தில்லை. கா. சு. “நூல் இழைப்பதும் ஆடை நெய்வதும் அறவே ஒழிந்த இந்நாட்டில், அவை தழைத்தற் பொருட்டுக் கதராடை அணிதல் வேண்டுவோரைக் குறுகிய மனப் பான்மையினர் என்று கூறுதல் தவறாதல் போலத் தூய தமிழ்ப் பேச்சு மிகக் குறைந்து தமிழ்ச் சொல்லாக்கு முறைகள் பெரிதும் மறைந் தொழிந்த, இத் தமிழ் நாட்டிலே அவை நிலைத்தற் பொருட்டுத் தூய தனித்தமிழ் வழங்கல் வேண்டும் என்றல் தக்கதேயாதல் காண்க” என்று உறுதி கொண்டு உழைத்தார்.

"தம்முடைய நலத்திற்குப் பங்கம் ஏற்பட்டாலும் கொண்ட கருத்தை வெளியிடாமல்இருக்கமாட்டார்! அப்படிப்பட்ட வீரர் எங்குளர்?” என்று இவரொடும் உறைந்த விடுதி மாணவர் கோவை கோ. ம. இராமச்சந்திரனார் இவரைப் பற்றிக் கூறும் செய்தியில் இவர் தம் உறுதிப்பாடு நன்கு விளங்கும்.

சமயச் சால்பும், சமயச் சீர்திருத்தமும், பகுத்தறிவு நாட்டமும், அருளியல் வாழ்வும் இவரியற்றிய ஒவ்வொரு நூலாலும் விளங்கும், தமிழர் சமயம் என்னும் பெயரீடே இவர் தம் சைவ வைணவ ஒருமைக் கொள்கை விளக்கமாம். அன்றியும் இவர் நெல்லையில் அறங்காவலராக இருந்த நாளில், "நெல்லையப்பர் எழுந்தருளியிருக்கும் மண்டபத்தின் இட ப்பால் திருமால் பள்ளிகொண்ட கோலத்தில் இருப்பதை எவரும் சென்று வணங்க இயலாதிருக்க, தடைச் சுவரைத் தவிர்த்து வழி செய்து அன்பர்கள் சென்று வழிபட்டு மகிழச் செய்தமையும், இவர் தாமே நடத்திய மணி மாலை மாதிகையில் ஆழ்வார்கள் வரலாற்றைத் தொடர்ந்தெழுதி வந்தமையும் சான்றுகளாம்.

6

இவர் ஆசிரியத்திறம் நூலாசிரியர், உரையாசிரியர், போதக ஆசிரியர், தாளாசிரியர் என நாற்றிறத்ததாய் விளங்கியது.