உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

>இளங்குமரனார் தமிழ் வளம் – 14

முதற்காட்சி நிகழுமிடம் ஒரு பொழிலென நூல்கள் கூறினும் பிற டமும் அதற்குரியதே என்பது மிதிலைக் காட்சிப் படலத்தில் கம்பர், இராமன் சீதையை மிதிலை நகரில் ஒரு மாடத்தில் கண்டதாகவும், சீதை தெருவில் செல்லும் இராமனைக் கண்டதாகவும், கூறியதால் உணர்க எனக்காட்சி இலக்கணத்தைக் தக்காங்கு விரித்துக் காட்டுகிறார். இதனால், சுந்தரர் கொண்ட காதல் காட்சியிடங்களும், இந்நாளில் அலுவலகங்கள், பணிமனைகள், கலை நிலையங்கள்,கடைத் தெருக்கள், காட்சியரங்குகள் இன்னவாறான இடங்களெல்லாம் காதல் அரும்புகளாகத் திகழும் பாங்கை உணர்ந்து கொள்ள ஏவுகின்றார்.

அகப்பொருள் துறைகளுக்குப் பேரின்பக் கருத்துரைப்பார் காட்சியை, அருட்குருவாய் வரும் இறைவன் திரு மேனியைக் காண்டல் என்றும், காட்சியின் புதுமையால் இறைவன் திரு மேனியே என்று தெளிதல், தெளிவு என்றும், திருமேனியாற் பயன் பெறலாம் என்றும் அவனிடத்தில் கருணை உண்டென்றும் அறிதல், குறிப்பறிதலின் பாற்படுமென்றும், அருள் பெற விரும்புதல் புணர்ச்சி விருப்பமென்றும் கூறுவர் என்று மணி வாசகப் பெருமான் திருப்பெருந்துறையில் இறைவனைக் கண்டு ஐயுற்றுத் தெளிந்து அருள் பெற்றமையால் நிறுவுகின்றார் (90).

அகத்துறைப் பாடல்களால் பண்டைத் தமிழரின் உயர்ந்த மனப்போக்கினை ஊகித்தறிதல் நம்மவர் கடன் எனக் கட்டளையிடும் ஆசிரியர், தலைவன், தலைவி, தோழி முதலியோர் கூற்று இன்ன ன்ன இன்ன இடங்களில் நிகழும் என்பதறிவிப்பான் சூத்திரம் செய்துள்ளமை கொண்டு, களவு கற்பு முறைகளை யாவரும் பொதுவாக அறிந்திருந்த காலத்துக் தொல்காப்பியர் நூலியற்றினார் எனவும், அம்முறைகளைத் துணை நூலால் அறிந்த பின்னரே தம் நூலைக் கற்றல் வேண்டுமென்பது அவர் கருத்தாகுமென ஊகிக்க இடமுண்டு எனவும் கூறுதலை அறிந்தால், திருக்கோவையார்த் துறை விளக்கத்தைத் தம் நூலின் முகப்பில் வைத்த காரணத்தை அறிந்து கொள்ளலாம். (104).

தமிழர், கரணம் இல்லாமல் அஃதாவது சடங்கு இல்லாமல் மணந்து கொண்ட காலமுமுண்டு என்பதைத் தொல்காப்பிய வழியில் கூறும் கா. சு. கரணச் சான்றாக அகம் 86 ஆம் பாடல் தொகுப்பைக் காட்டுகிறார்.