உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கா. சு. திருக்குறள் தெளிவுரை

து

கா.சு அவர்கள் திருக்குறளுக்குத் தெளி பொருள், விளக்கப் பொழிப்புரை வரைந்துளர். அதன் முதற்பதிப்பு 1928-இல் வெளி வந்தது. அதனை வெளியிட்டது சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம். ஏறத்தாழ ஒருபதின் பதிப்புகளை அது கொண்டுள்ளது. பொதுமறை, பாயிரம்

திருக்குறள் ‘பொதுமறை' எனச் சுட்டும் ஆசிரியர், ஆதித் தமிழ் நான்மறைகள் மறைந்த பின்னர் அந்நான் மறைக் கருத்துகளை விளக்குமுகத்தான் ஆசிரியர் திருவள்ளுவரால் செய்யப்பட்டது என்னும் கருத்தைப் பாயிரத்தில் வைக்கிறார். அப்பகுதியிலேயே கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்னும் முதல் நான்கு அதிகாரங்களும் திருக்குறளின் ‘பாயிரம்' என்னும் கருத்தையும் வெளியிடுகின்றார்.

சிவநெறியும், பொதுவும்

திருக்குறள் வேதவழிப் பட்டது என்பது பரிமேலழகர் முதலிய உரையாசிரியர்களின் கருத்து. அதனைக் கருத்தில் கொண்ட தமிழ்க் கா. சு. தமிழ்ச் சைவ நெறிப் பட்டது என்னும் கருத்தை நிலைநாட்டுவார் போலக் கடவுள் வாழ்த்தின் உரையை வரைகின்றார்.

முதற் குறளில், “உலகத்திலே உடம்பெடுப்பதற்கு அருட் சக்தியோடு கூடிய கடவுளே காரணமாதலால் உலகம் மாதொரு பாகனாகிய கடவுளைத் தலைவனாக உடையது” என்றும், வான் சிறப்பு முகப்பிலே மழைச் சிறப்புக் கூறுதல், திருவருட் சக்தி வணக்கங் கூறுதலாக முடிகின்றது என்றும், மலர்மிசை ஏகினான் என்பதற்கு "உயிர்களது உள்ளக் கமலத்தின் மேலிடமாகிய பரவெளியிலே கூத்து இயற்றுகின்ற கடவுள்” என்றும் கூறு வனவற்றாலும், பிறவற்றாலும் இது விளங்கும்.

சிவநெறி வழிப்பட்டது பொதுமறையோ என வினவுத லுண்டாயின், தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறை என்னும் மணிமொழி, மறுமொழியாம் எனக் கொண்டு உரை கண்டாராகலாம்.