உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.' கலைக்களஞ்சியம்

37

தமிழர் சமயம் என்னும் நூற் பகுதியின் பொருளடக்கம் 17 பிரிவுகளைக் கொண்டது. தமிழர் யார்?, தமிழர் பண்டைய நாகரிக நிலை, நாட்டியக் கலை, இசைக்கலை, சமயக்கலை, இந்து மதம் ஒரு மதமன்று, தமிழர் மெய்க் கலை, மன இயல்புகள், உயிர் இயல்பு, ஆகமம் கூறும் முதல்கள், சீர்திருத்தங்கள், கோயில் புகுதல், பெண்ணுரிமை, மக்கள் முன்னேற்றம், சமய ஒற்றுமை, தமிழர் சட்டம், செந்நெறி விரிவு என்பன அவை.

தமிழ் என்னும் சொல்லும் தமிழில்லை என்று அந்நாளில் சிலர் கூறினர். தமிழ் என்னும் சொல் தமிழே என்பதை நிலை நாட்டுகிறார் கா. சு. மக்களின் முதல் தோற்றம் கடல் கொண்ட குமரி நாடே என்பதையும் சீரிய சான்றுகளால் செவ்விதில் நிறுவுகிறார். தமிழ் மொழி வட மொழி ஆகியவற்றுள் அமைந்துள்ள வேறுபாடுகளையும் பலப்பல எடுத்துக்

காட்டுகளால் நிலைப்படுத்துகிறார் (1-22).

பண்டைத் தமிழர் உணவு, உடை, வணிகம், கலை, நாகரிகம், அரசு, சிற்பம், ஓவியம் ஆகிய நாகரிக நிலைகளை அகநாட்டுப் புறநாட்டுச் சான்றுகளுடன் விளக்குகிறார். (23-34)

கொடு கொட்டி, பாண்டரங்கம், காபாலம் ஆகிய தெய்வ ஆடல்களையும், கோயில் திருக் கூத்துகளையும் நாட்டியக் கலைப் பகுதியில் நாட்டுகிறார். தாளம், பண், இசைக்கருவி, இசை நயம், கோயிலில் இசை வளர்க்கப்பட்ட வகை என்பவை இசைக் கலைச் செய்திகள்.

தமிழ் இலக்கணச் சிறப்பு, தொல்காப்பியப் பழமை, ஆவணி முதல் ஆண்டு தொடங்கிய குறிப்பு, தமிழர் மருத்துவத் தேர்ச்சி, தமிழ் மந்திரம், தமிழர் கணிதப் புலமை இன்னனவும் ஆயப் படுகின்றன(36-46).

அயலர் வருகைக்கு முன்னரே தமிழர் சமயத்தில் அமைந்து கிடந்த கொள்கைகள், வழிபாட்டு முறைகள். கோயில் திரு வுருவங்கள், விழாக்கள் என்பவை சமயக் கலைப் பகுதியில் சாற்றப் படுகின்றன(46-72).

தமிழர் மெய்க்கலை உடல், உயிர், உயிர்மெய், கடவுள், இயவுள், இறைவன் முதலாய தமிழ்ச் சொற்களைக் கொண்டு, அதன் தொன்மையும், செம்மையும் நன்கு தெளிவிக்கப் பட்டுள்ளது (75-81).