உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் 'கா.சு.' கலைக்களஞ்சியம்

51

அவனுடைய கோப்பெருந்தேவியும் தீக்குழி புகாமல் தனது உடம்பை நீத்து உடன் சென்றமை போல் மாதினியாரும் செய்திருத்தல் கூடுமென்று உய்த்துணர இடமுண்டு என்கிறார்.

திலகவதியார் மணம் புரிவதற்கு இசைந்திருந்த கலிப் பகையார், விண்ணுலகஞ் சென்றதைக் கேட்ட மாத்திரத்தில் அவர்பால் தனது உயிரையும் இசைவிக்கக் கருதிய மனப் பான்மை வேறு எச் சரித்திரத்திலும் கேட்கப் படாதது ஒன்று என வியக்கிறார். (12).

சமண சமயத்தில் தமது வினைக்கேற்பத் தம்மைப் புகுத்தியதற்கும், பின் நோய்மடுத்து ஆட்கொண்டு அதனை நீக்கியதற்கும் தமக்கு எல்லையில்லாத சிவானுபவத்தைக் கொடுத்ததற்கும் காரணமாய் இருந்தவர் சிவபெருமானே என்பதையும், சமணரினின்று தம்மைப் பிரித்தவரும் தம் தாளில் அடைக்கலம் புகுத்தியவரும் தம் தன்மையைத் தமக்கு உணர்த்தியவரும் சிவபெருமானே என்பதையும் நாவுக்கரசர் வாக்காலே காட்டுகிறார். (18-21).

அப்பர் பெருமான் திருவருள் பெற்ற வரலாற்றினை உற்று நோக்குவார்க்குக் கடவுள் வழிபாடு கூறாத சமயங்கள் பொய்ச் சமயங்கள் என்பதும், பல கடவுளர் வழிபாட்டிலும் தனக்கு வமையில்லாத முழுமுதற் கடவுளது வழிபாடே சிறந்ததென்பதும் மலையிலக்காக விளங்கும் என்கிறார் (22).

சமயப்பிணக்கின் அடிப்படையை ஆராயும் கா. சு. அதன் சால்பினை அருமையாக விளக்குகிறார்.

ஒருவர் பிறந்த சமயம் காரணமாகவாதல், அவர் கொண்ட கொள்கை பற்றியாதல் அவரை இழித்துக் கூறுதலும் பகைத்தலும் தவறு. ஆனால் சமயக் கொள்கைகளுள், ஒன்று உயர்வு ஒன்று தாழ்வு, என்று தமது ஆராய்ச்சியிற் கண்டபடி ஒருவர் கூறுதல் குற்றமாகாது.

உலகத்திலே பிறப்பினுடைய உயர்வு தாழ்வுகளைக் கருதாது நல்லொழுக்கங் காரணமாகவே மக்களை மதித்தல் பொருத்தமுடையது. அது போலவே, உயர்ந்த சமயத்திலாதல் தாழ்ந்த சமயத்திலாதல் பிறந்ததனால் மாத்திரம் ஒருவனை இழித்துக் கூறாது அவனுடைய ஒழுக்கத்திற்குத் தக்கபடி அவனை மதித்தலே சால்புடைத்தாம்.

உயர்ந்த கொள்கையுடைய சமயத்தில் பிறந்தும், ஒழுக்கத்திற் சிறவாதவன் தாழ்ந்த சமயத்திற் பிறந்து ஒழுக்கத்திற்