உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.' கலைக்களஞ்சியம்

53

பெரியோர்க்குச் சமணர் புத்தர் முதலியோரிடம் இரக்கம் நிகழற்பாலதேயன்றிப் பகைமை நிகழக் காரணமில்லை. இஃதறியாதார் சைவ சமயப் பெரியாரைச் சமயப் போர் செய்யும் ஒடுங்கிய சிந்தையர் என்று பிழைபடக் கூறுவர். அது பெருந்தவறாகும்.

இனிப் புறச் சமயத்தினின்றும் சைவ சமயத்துட் புகக் கருதுவாரைச் சைவ சமயத்தார் அன்போடு ஏற்று அவர்களை முறைப்படி திருநீறு அணிவித்துச் சமய உரிமைகள் யாவற்றையும் அவர்க்களித்தலே தக்கதென்க. அது நம் நாயனாரை அவர் தமக்கையார் ஐந்தெழுத்தோதித் திருநீறணிவித்துத் திருக் கோயிலுள் அழைத்துச் சென்றமையால் நன்கு காட்டப் பட்டதாகும் இவ்வாறு சமயச் சால்பையும், சமயத்தார் தொண்டையும் பலபட விளக்குகிறார் கா. சு (25-6).

-

பாடலிபுரத்தில் அந்நாளில் இருந்த சமண சமயத்தவர் செயற்பாடுகளைக் கருதும் கா. சு, அவர்கள் அடிப்படைக் கொள்கையை இகந்து நின்ற செருக்கையும் சுட்டுகிறார்.

"பாடலிபுரத்திருந்த அக்காலத்துச் சமண முனிவர்கள் தங்கள் சமயம், அரசராலே போற்றப்பட வேண்டுமென்றும் மற்றைச் சமயங்களை வென்ற புகழ் அதற்கு நிலைத்திருக்க வேண்டுமென்றும் கருதினாரே ஒழியத் தங்கள் சமயத்துட் கூறப்பட்ட அருளொழுக்கத்தைப் போற்ற வேண்டுமென்று கருதவில்லை. இஃது அச்சமயத்தாரது மிக்க இழிந்த நிலையினைக் காட்டுவதாகும் என்கிறார்.

விளக்கு வைத்தால் அதில் விட்டில் விழும் என்று காலை காலத்து உண்டும், தரையிலுள்ள சிற்றுயிர்கள் காலினால் மிதிபட்டு இறத்தல் கூடுமென்று பீலிகொண்டு பெருக்கியும், உடையில் ஊர்வன ஏறிச்சாமென்று உடுத்தாதும், உறியில் வாழ்ந்தும் இன்னும் பல்வகை உபாயங்கள் செய்தும் கட்புலனாகாத சிற்றுயிர்களையும் பாதுகாக்க வேண்டுமென்ற கொள்கையுடைய சமண முனிவர்கள் மக்களுள் தலை நின்ற அப்பமூர்த்திகளை நீற்றறையில் அடைத்தல், நஞ்சுண்பித்தல், மத யானையால் இடறச் செய்தல், கல்லிற் கட்டிக் கடலிலிடல் என்னும் பெரும் பாதகச் செயல்களைச் செய்யத் துணிந்தமைக்குக் காரணம் அவர்கள் தம் சமயக் கொள்கையை அறவே கைவிட்டுச் சமயக் செருக்கினால் விழுங்கப்பட்டுப் பித்துக் கொண்ட விலங்கின் நிலைமையை எய்தியமைதான் எனக் கடிந்து உரைக்கிறார்.