உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

இளங்குமரனார் தமிழ் வளம் 14

அருணகிரி புராணம், திருவிளையாடற் புராணம், காசி காண்டம், சங்கர நாராயணர் கோயிற் புராணம், காஞ்சிப் புராணம், திருவானைக்காப் புராணம், கருவூர்ப் புராணம், மருதூர்ப் புராணம் என்னும் எட்டுப் புராணங்களில் இருந்தும் பாடலாக எட்டுப் பாடல்களைக் கொண்டது ஒவ்வொரு புகழ் L மாலையாகும்.

முழுமுதற் கடவுளின் திருவடிப் பேற்றை அடைதற்குரிய மைந்தர் உலகப் பற்றை அறவே ஒழித்த துறவோர் எனவும், அப்பற்றுடையராய்க் கடவுள் அன்பினை வளர்த்து அப்பற்றுத் தானே நீங்கும்படி வாழும் அறவோர் எனவும் இருவகைப் படுவாருள், பின்வகையைச் சேர்ந்த பெருந்தகை சுந்தரர் என்பதைத் தோற்றுவாயின் தோற்றுவாயில் சுட்டுகிறார் கா. சு. இதன் விளக்கமாகவே தோற்றுவாய் அமைகின்றது.

சுந்தரர் என்ற திருப்பெயர் நமது நாயனார் புராணத்துட் காணப்படவில்லை. திருநாவுக்கரசர் புராணத்துள் “அறந்தரும் நாவுக்கரசு ஆலால சுந்தரரும்” என்ற விடத்து அது வந்துள்ளது எனச் சுந்தரப் பெயரை ஆய்ந்து கூறுகிறார் சுப்பிரமணியனார் (8). நாவலூரிற் பிறந்தவர்க்கு ஆரூரர் என்ற பெயர் வந்ததற்குக் காரணம் தெளிவாகத் தெரிந்திலது என்று கூறும் அவர், நாயனாரது பெற்றோர்கள் திருவாரூர்ப் பெருமானிடம் மிக்க அன்புடையவராய்த் தமது அருமைப் புதல்வருக்கு அவர் பெயரை இடக் கருதினர் போலும்” என்று கருதுகிறார்.

திருவருளால் உதித்த இளந்தோன்றலார் அரசருக்கு (நரசிங்க முனைய தரருக்கு)க் காதலை விளைக்கும் வனப்பினராக விளங்கினமையால் ஆரூர்க்கே ‘அழகர்' என்ற பெயர் தகும் என்கிறார். (19)

மணப்பருவம் அடைந்த சுந்தரர்க்குப் புத்தூர் சடங்கவி சிவாச்சாரியார் நன்மகளாரை மணம் பேசி முடிக்க, மணக் கோலம் கொண்ட சுந்தரர் புரவி மேலேறிச் சென்றார். இதனைக் கருதும் தமிழ்க் கா. சு. “மணமகன் நலன் அமைந்த குற்றமற்ற குதிரையின் மேலேறித் திருமணப் பந்தர்க்குச் செல்லுதல் இக்காலத்தில் வழக்கின் வீழ்ந்து ஒழிந்தது போலும். மகமதியர்க் குள்ளேயே அவ்வழக்கம் இக்காலத்துக் காணப் படுகின்றது. அவர்கள் தமிழரிடம் இருந்து அதனைக் கற்றார்களோ தம் மத வழக்கமாய்க் கைக் காண்டார்களோ தெரியவில்லை, என்கிறார்.