உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

>இளங்குமரனார் தமிழ் வளம் – 14

மேலும், பழமொழி, இரட்டுறல், சொல்லழகு என்பவற்றை எடுத்துரைக்கும் ஆசிரியர், திருக்கோவையாரில் வரும் திருப்பதிகளைத் தொகுத்துக் காட்டுகிறார் (94). அவ்வாறே, சிற்றம்பலத்தின் மாட்டு அன்பிலாதவரே அல்லலுறுவார் என அடிகள் கூறும் பாடல்களையெல்லாம் பாடல் எண்ணில் படைக்கிறார் (99).

திருவாசக அகவல் ஆராய்ச்சி என்னும் ஏழாம் பகுதியில் சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல் என்பவற்றின் திரண்ட பொருளுரைத்துச் சுருங்கிய அளவில் ஆய்வும் வழங்குகிறார்.

புராணம் என்பது பழைய வரலாறு. ஆதலால், வரலாற்று முறையில் மிகத் தொன்மையான உலகத் தோற்றம் முதலியவற்றை இறைவனது திருவருட் செயலின் வைத்து விளக்குகிறார் எனச் சிவபுராணச் செய்தியை உரைக்கின்றார்.

கீர்த்தித் திருவகவலுள் பெரும்பான்மையும் பாண்டிய நாட்டில் இறைவன் இயற்றிய திருவிளையாடல் எடுத்தோதப் பட்டன என்பதை விளக்குகிறார். தசாங்கம் என்பதிலும் கீர்த்தித் திருவகவலிலும் கூறப்படும் தசாங்கங்கள் வேறுபடுதலைச் சுட்டுகிறார் (108). அதனை எடுத்து விளக்கமும் செய்கிறார்.

திருவண்டப் பகுதியுள் படைப்புப் பொருள்கள் முழுவதையும் உள்ளடக்கிய பேரிடமாகிய பேரண்டத்தை அண்டமென்றும், அவற்றின் பல்கோடிப் பிரிவுகளை ‘உண்டைப் பிறக்கம்' என்றும் கூறி, முத்தொழிற்றன்மையைப் பொதுப்பட வியத்தல் முதலாக விரித்துரைக்கிறார் (109).

போற்றித் திருவகவலில், உயிர்கள் பல்வகைப் பிறப்பெடுத்த பின் மக்கட் பிறவியை அடைந்து, பல வகையான இடையூறுகளைக் கடந்து, பேரன்பின் பயனாக இறைவனே குருவாக வந்தருளப் பெற்று, வீடு பேற்றிற்குரிய நெறியில் நிற்கும் முறையினைத் தொகுத்துக் கூறி, இறைவன் புகழைப் பகுத்துப் பாடும் சிறப்பை மிகப் பாராட்டுகிறார் (113).

"தென்னாடாகிய தமிழ்நாட்டில் ஆதியில் வழங்கிய சிவநெறியே பின்னர் எந்நாட்டிலும் பரவியதாதலின்,

“தென்னா டுடைய சிவனே போற்றி எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி”