உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

இளங்குமரனார் தமிழ் வளம் – 14

“கல்லால் நிழல்மலை' என்னும் மங்கல வாழ்த்துச் செய்யுளே, நூலானது பன்னிரண்டு சூத்திரமுடைய தென்றும் முதல் ஆறு சூத்திரம் பொதுவும் பின்னாறு சூத்திரம் சிறப்புமாம் என்றும் மும்மூன்று சூத்திரங்கள் ஒவ்வோர் இயலாக அமைந்து முறையே முப்பொருள் உண்மை அவற்றின் இலக்கணம் சாதனம் பயன் என்பவற்றை உணர்த்துமென்றும் குறிக்குமாற்றினையும் பாடிய முடையார் காட்டியது போல நுட்பமாகப் பிறர் எவரும் காட்ட அரிதாகும் எனப் பாராட்டுகிறார். சிவஞான போத அவையடக்கத்தைப் பற்றி ஆயும் கா. சு., இச்செய்யுளைப் போல உண்மை நவிலும் அவையடக்கம் வேறு யாதும் இல்லை என்கிறார்.

புறப்புறச் சமயக் கொள்கைகளை நிரலே எடுத்துரைக்கும் ஆசிரியர் நிறைவில், இச்சமயங்கள் எல்லாம் உலகம் உண்டு, உலகமும் உயிர்களும் உள்ளன, கடவுளும் உயிர்களும் உலகமும் உள்ளன, கடவுளும் உயிரும் முடிவில் ஒரு பொருளே, இரண்டும் முடிவில் சமமாவனவே என்ற கொள்கைகளே கொள்கைகளாக உடையன. வினையுண்டு - மாயையுண்டு மூலமலமுண்டு என்பதிலும் சமயிகள் வெவ்வேறு கொள்கையுடையவர்களே என்கிறார். பின்னர்ச் சைவ சித்தாந்தக் கொள்கையைச் சிவஞான போதத்தின் வழியே முதல் நூற்பா தொடங்கி விரித்துரைக்கிறார்.

-

-

சூத்திரக் கருத்துரைத்து, அதற்கு விளக்கம் தந்து, ஒவ்வோர் அதிகரணக் கருத்துமுரைத்து விளக்கிச் செல்கிறார்.

முதற் சூத்திரத்தால் பதியுண்மையும், இரண்டாம் சூத்திரத்தால் பாகவுண்மையும், மூன்றாம் சூத்திரத்தால் பசு வுண்மையும் கூறப்பட்டதாகலின் இம்மூன்று சூத்திரத்தையும் பிரமாண இயலென்ப என்கிறார். இவ்வாறே நான்காம் சூத்திரத்திலே உயிரின் இலக்கணமும், ஐந்தாம் சூத்திரத்திலே பாச இலக்கணமும், ஆறாவதில் பதியிலக்கணமும் போந்தமையின் இம்மூன்றும் இலக்கண இயல் என்னப்படும் என்கிறார்.

சிவஞான போதப் பொழிப்புரை என்னும் பகுதியில் உரையும் குறிப்புமாக உரைத்துச் செல்கிறார். கருத்துக் குறிப்பு உரைநடை என்னும் தலைப்பிலும் எழுதுகிறார்.