உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

இளங்குமரனார் தமிழ்வளம்

15

முகம் வழிக்காமல் விட்டுவிட்டால் என்ன? களை மண்டிக் கிடக்கிறது என்பதும், முடிவெட்டி முகம் வழித்தலைக் களை வெட்டுதல் என்பதும் புதுவதாக வழங்கும் வழக்குகள். முகம் வழிக்காத முகத்திற்கும், வழித்த முகத்திற்கும் உள்ள முன்னைக் ‘களை’யும் பின்னைக் 'களை'யும் களைக்கு அமைந்த இருவகைப் பொருள்களையும் நன்கு விளக்கும்.

களைதல் என்பது களை களைதலை மட்டுமோ குறித்து நின்றது. முடி களைதல், உடை களைதல், அணி களைதல், அழுக்குக் களைதல், துயர் களைதல் இப்படி எத்தனை எத்தனை களைதல்கள் வழக்கில் உள்ளன! அழுக்கிலா முகம், அவலமிலா முகம், வஞ்சம் சூது இலா முகம், அமைய வேண்டும் அமைப்பெல்லாம் ஒருங்கமைந்த முகம், புன்முறுவல் பூத்துக் குலுங்கும் முகம், மலரும் கண்ணும் மகிழும் சொல்லும் அமைந்த அழகு முகம் ‘களை’ யான முகம் என்பதில் என்ன ஐயம்! “முகக்களை' என்பதில் தான் என்ன ஐயம்!

களையின் பொருள் எதிரிடைப்பட்டதெனினும், எத்தகு நயமுடையதாக வாழ்வொடு இயைந்ததாக அமைந்துள்ளது என்பதை எண்ண எண்ணக் களைப்பு' உண்டாவதில்லை! ‘களை’யே உண்டாகும்; களிப்பே உண்டாகும்.