உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

இளங்குமரனார் தமிழ்வளம் 15

குட்டை மட்டுமோ சிறுமைப் பொருளில் நின்றது? குட்டி என்பது சிறுமைப் பொருள் தருகின்றது அன்றோ! ஆட்டுக் குட்டி, கன்றுக் குட்டி, மான் குட்டி, முயல் குட்டி, எலிக்குட்டி முதலிய குட்டிப் பெயர்கள் - ஏன்? யானைக் குட்டியும் கூட, தாயை நோக்கச் சிறியவைதாமே! அக்குட்டிப்பெயர், எத்தனை எத்தனை குட்டிகளைப் போட்டுள்ளது, குட்டிச்சாக்கு, குட்டிப்பை, குட்டிக் கிழங்கு, குட்டிச்சுவர், குட்டிச் சாத்தான், குட்டிப்பல், குட்டி நரை, குட்டிப் பானை, குட்டி விரல், குட்டியப்பன், குட்டிக் கலகம், குட்டித் திருவாசகம், குட்டித் தொல்காப்பியம் இப்படி எண்ணிக் கொள்ளலாமே!

விலங்கின் குட்டிதானோ குட்டி? மக்களிலும் குட்டிப் பெயர் உண்டே. ‘குழந்தை குட்டி எத்தனை?' என்பதிலும் ‘குட்டி குறுமான்' என்பதிலும் குட்டி மகளைக் குறிக்கவில்லையா! கால் தடம் ஒன்றைக் கொண்டே மகளிர், ஆடவரில் ‘குட்டியர்’ என்பதைக் கண்டுவிடலாமே! மகன் மானாதல், பெருமகன் (பெருமான்) என்பதாலே அறிய வருமே!

குட்டி பெண்பால் பெயராயின், ஆண்பால் பெயர் ஒன்று இருத்தலும் பொருந்துவதுதானே. அது ‘குட்டன்’ என்பதாம். குட்ட நாடாம் மலையாள நாட்டிலே குட்டன் பெயருடையார் மிகப் பலர். இங்கே, பெரியாழ்வார் குட்டனொடு மிகமிகக் கொஞ்சுகிறார். ‘என் குட்டன் வந்தென்னைப் புறம் புல்குவான்' என்கிறார் (19:1). 'கருங் குழற்குட்டனே சப்பாணி' என்கிறார் (1.6:1)

'கோவலக் குட்டற்கு' என்கிறார் (1.2:13). 'என்சிறுக் குட்டன் எனக்கோர் இன்னமுது எம்பிரான்' என்கிறார்(1.4:2).

குட்டம் என்பது மிகப் பழஞ்சொல். சங்கச் சான்றோர், வாக்கிலும் பயின்ற சொல். 'நெடுநீர்க் குட்டம் (புறம் 243). 'இருமுந்நீர்க் குட்டம்' (புறம். 20) 'நளிகடல் இருங் குட்டம்' *(புறம். 26) என்று பயில வழங்கப் பெறுகின்றது. இக் குட்டச் சொல்லிற்கு 'ஆழம்' என்பது பொருளாம். குறுகிய இடத்தில் அமைந்த நீர் நிலையைக் குறித்த குட்டம் என்னும் சொல் அதன் பின் அதன் ஆழத்திற்கு ஆகிப், பின்னே, அதனினும் விரிந்து அவ்வாழப் பெருக்குடைய கடலளவுக்கு விரிந்ததாதல் வேண்டும். இதனை நோக்க இச் சொல்லின் தொல் பழமை மிகத் துலங்கும்.

ஆசிரியர் தொல்காப்பியனார் யாப்பியல் கூறுங்கால். குட்டச்’ சொல்லைக் குறித்தார் (1372-74). 'குட்டமும் நேரடிக்கு