உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

15 இளங்குமரனார் தமிழ்வளம்

வெயில் வாட்டுதலால் காய்ந்துபோன குச்சி, பச்சை மரத்தில் ஒட்டிக் கொண்டு இருந்தால்கூடச் ‘சுள்ளி' என்றன்றோ பெயர் பெறுகின்றது! முதிர்ந்த புளிய மரத்தின் பட்டையுலர்ந்து பக்குவிட்டதற்கும் சுள்ளி என்பது பெயரே சுள்ளல் என்பதும் சுள்ளியேயாம். உடனே பற்றவைத்துச் சமைத்தற்குச் 'சுள்ளி பொறுக்குதல்' சிற்றூர்ச் சிறார் பணிகளில் தலையாய ஒன்றாம்.

சுள்ளெனக் கடித்துத் துன்புறுத்தும் சில உயிரிகள் கள்ளுப் பூச்சி, சுள்ளெறும்பு, சுள்ளாஞ் சுருக்கு, சுள்ளிடுவான் என்னும் பெயர்களால் வழங்கப்பெறுகின்றன.

வெப்பம், உறைப்பு, வலி முதலிய பொருள் தந்த ‘சுள்’ என்னும் சொல் மேலும் பொருளால் விரிந்து ‘சினம்' என்பதையும் சுட்டுவதாயிற்று. 'சுள்ளம்' என்பதும் சினம் என்னும் பொருள் தருவதாயிற்று. 'சுள்ளாப்பித்தல்' என்பதற்கு அடித்தல், உறைத்தல், எரித்தல், சூடு காட்டல், சுருக்கேற்றல் முதலிய பொருள்கள் பின்னே கிளைத்தன.

சுள்ளென்று உறைக்கப் பற்றிப் பிடிக்குமாறு அறையப் பெறும் மரத்து ஆணி சுள்ளாணி' எனப் பெயர் பெறும். கைம்மரத்தில் சுள்ளாணிக் குச்சி உண்டு. கதவு நிலைகளின் பூட்டு வாய்ப் பொருத்துகளுக்குச் சுள்ளாணி வைத்து இறுக்கி இழைப்பதைத் தச்சுத் தொழிலில் காணலாம். சுள்ளாணியாகப் பெரும்பாலும் கல் மூங்கில் பிளாச்சுகளையே பயன் படுத்துவர். மூங்கிலுக்குச் ‘சுண்டகம்’ என்னும் பெயர் உண்மை கருதத்தக்கது.

சுள் வழியாகத் தோன்றிய ஒரு சொல் ‘சுளுந்து’ ஆகும். அது ‘சூந்து’ என்றும் இடைக் குறைந்து முதனீண்டு வழங்கும். காய்ந்த அல்லது உலர்ந்த தட்டைகளையும் சுள்ளிகளையும் சேர்த்துக் கட்டித் தீமூட்டிச் சுழற்றும் ஒருவகை விளையாட்டே சுளுந்து ஆகும். கார்த்திகைத் திருவிழா, பொங்கல் விழா, விளக்கு வரிசை விழா (தீபாவளி) ஆகிய விழாக்களின் போது சுளுந்து விளையாடுதலைச் சிற்றூர்களில் இப்பொழுதும் காணலாம்.

தீமூட்டிச் சூடேற்றிப் பொருள்களை உண்டாக்கும் பழம்பணிக்களங்கள் ‘சுள்ளை' என வழங்கப் பெற்றன. அவை 'பானைச்சுள்ளை', 'செங்கல் சுள்ளை', 'சுண்ணாம்புச் சுள்ளை' என்பன சுள்ளை என்பது 'சூளை' என்றும் வழங்கப்பெறும். சூளைப் பெயராலேயே அமைந்த ஊர்களும் குடியிருப்புகளும் உண்மை முந்து அவை சூளையாயிருந்தமையைப் புலப்படுத்தும் சான்றுகளாம்.