உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம்

சொல்

135

காய்ந்து உலரும் பொருள் சுருங்குதல் கண்கூடு. ஆதலால் ‘சுள்ளல்' என்பதற்குச் சிறுமைப் பொருளும் உண்டாயிற்று. அதனால், அகர முதலிகள் 'சுள்ளல்' என்பதற்கு 'வளமை யற்றது' என்றும், 'சுள்ளலி' என்பதற்கு 'உயரத்திற்குத் தக்க பருமை யற்றது' என்றும் பொருள் கூறுகின்றன.

சுள் என்பது சுள்ளு என்றாகிச் சுண்டு என்றும் மாறும். அப்பொழுதும் அதன் அடிப்பொருளான வெப்பம் சினம் சிறுமை முதலியவும் தொடரும். கல்லையும் கிளிஞ்சில் முதலிய வற்றையும் சுட்டெரித்து நீறாக்குவதால் கிடைப்பது சுண்ணம், சுண்ணாம்பு என்பன. சுண்ணாம்பின் பயன் நாடறிந்தது. சுண்ண வெண்ணீறு, இறைமைப் பொருளாயிற்று. சுண்ணமிடித்தல் கலைத்திறம், திருத்தக்க தேவராலும் ஆளுடைய அடிகளாராலும் பாடு புகழ் பெற்றது.

உலர்ந்து வற்றலாகிப் பயன்படும் ஒருவகைக் காயைத் தரும் செடி ‘சுண்டைச் செடி' எனப்பெறுவதும், அதன் காய். சுண்டைக் காய் எனப் பெறுவதும் அதன் வற்றல், சுண்டைவற்றல் எனப் பெறுவதும், மீண்டும் சுடவைத்த கறியும் குழம்பும் சுண்டைக்கறி சுண்டைக்குழம்பு எனப் பெறுவதும் வற்றக் காய்ச்சுதல் ‘சுண்டக் காய்ச்சுதல்' எனப் பெறுவதும் வழக்காறே. சுண்டற் கடலையை அறியார் எவர்? சுண்டல் கிடைக்கும் என்று கூட க் கோயில்களில் கூடும் கூட்டமும் உண்டன்றோ!

நீரை மிகுதியும் இஞ்சி (இழுத்து) வாளிப்பாக வளர்தலால் ஞ்சிப் பெயர்பெற்ற மூலப்பொருள். உலர்ந்து சுண்டிப் போதலால் சுண்டி' என்றும், 'சுண்டியம்' என்றும் பெயர் பெறும். சுக்கு என்பதும் அதன் பெயரே. சுக்கல் என்பது காய்தல். ‘சுக்கல் சுக்கல், சுக்கான் பாறை, சுக்கானீறு (சுண்ணாம்புக் கல்நீறு) சுக்கான் கீரை (புளிக் கீரை, புளிச்சக் கீரை) என்பவற்றைக் கருதுக.

சுண்டு என்பதற்குச் சிறுமைப் பொருள் உண்மையைச் சுண்டெலி, சுண்டுவிரல், சுண்டுவில், சுண்டு கயிறு, சுண்டன் (மூஞ்சூறு), சுண்டாங்கி (சிறிது) சுண்டிகை (உள்நாக்கு) என்ப வற்றால் கண்டுகொள்க.

கதிரோன் வெப்பத்தின் வழியே பிறந்த சுள் என்னும் சொல், தீயின் வெப்பத்திற்கு மாறுங்கால் ‘சுர்' என்னும் ஒலிக் குறிப்புச் சொல்லாகி மிகப்பல சொற்களாக விரிந்துள தாம். ‘சுர்’ வழியே வரும் சொற்களைக் காணின் சுரத்தின் மூலம் மிகமிகத் தெளிவாகும்.