உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

இளங்குமரனார் தமிழ்வளம்

15

சுர் என்பதில் இருந்து பிறக்கும் சொற்களுள் ஒன்று சுருக்கு' என்பது அது வலியையும், விரைவையும் குறிக்கும். 'சுருக்கென முள் தைத்தது? என்பது கேள்விப் படுவதே. உடலில் சில பகுதிகளில் ஏற்படும் குத்தல்களைச் சுருக்குச் சுருக்கெனக் குத்துவதாகக் கூறுவர், ‘சுள்ளாஞ் சுருக்கு’ என ஓர் உயிரியுண்மை நாம் முன்னரே அறிந்ததே. ‘சுருக்காக வா’ என்னார் எவர்?

சுர் என்பது ‘சுருசுரு' என இரட்டைச் சொல்லாய் விரிந்து எரிவையும், ஊர்தலையும் குறிக்கும். தேட்கடி, பூரான்கடி, நட்டுவாய்க்காலியின் கடி, பாம்பின் கடி முதலியவற்றைச் ‘சுருசுரு’ என்று வலி ஏறுகின்றது என்பது வழக்கே. தீ, ‘சுருசுரு எனப் பிடித்து எரிவதாகக் கூறுவதும் வழக்கே.

சுடுபடும் பொருள் அல்லது காயும் பொருள் சுருங்குவது இயல்பு. இலை வாடிச் சுருங்குவதும், சுருக்கம் நிமிராமல் சுருண்டு போவதும் கண்கூடு, உடல்வாளிப்பும் குருதி வளமும் குன்றும் போது, தோற் சுருக்கம் உயிரிகளுக்கு உண்டாகி விடுகிறது. பழுத்த பழங்களும், வெயிலடிபட்ட காய்களும், சூடுபட்ட கிழங்கு களும் பிறவும் சுருங்கிப் போகின்றன. ஆதலால் வெதுப்பத்தால் பொருள்கள் சுருங்குவதைத் தெரிந்து கொள்ளலாம்.

வெப்பக் கரணியம் கருதி இடப்பெற்ற இச்சுருளல் பெயர், பின்னே பொருளால் விரிந்து சுருள்பவற்றுக்கெல்லாம் ஆயிற்று. சிலருக்குக் குடுமியும் கூந்தலும் சுருட்டையாக விளங்குவதும், ‘சுருட்டை சோறு போடும்’ எனப் பழமொழி வழங்குவதும் அறிந்தனவே. சுருட்டைக்கு அழகுண்மை, சுருளா நிமிர் முடியரும் தம் முடியைச் சுருட்டிச் சுருட்டி வளைத்து விடுவதால் அறியக் கிடக்கிறது.

சுருட்டையின் புகழ் ஒன்றா? இரண்டா? சுருட்டைப் பாம்பு உண்டு; சுருட்டை விரியன் என்னும் பாம்பும் உண்டு; சுருட்டை என்னும் ஒருவகை இலைநோயும் உண்டு; சுருள்பவை எல்லாம் சுருட்டைகள்தாமே!

பழமையான சுருளலும் சுருட்டையும், புதுமைக் கோலமும் கொண்டன. சுருட்டு என்னும் பெயரில் புகைப் பொருள் ஒன்று உண்டன்றோ! புனை சுருட்டு என்னும் பொய்ப்பழிச் சொல்லுக்கும் மூலமன்றோ சுருள்! பிறர் பொருளைக் கவர்வதைச், ‘சுருட்டிக் கொண்டு போதல்' என்றும், இறந்து போதலைச், சுருட்டிக் கொண்டு போய் விட்டது' என்றும் கூறுவதும் வழக்கேயன்றோ!