உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

அப்பு

இளங்குமரனார் தமிழ்வளம்

15

‘அப்பு' என்பது அப்பாவைக் குறிக்கும் முறைப்பெயர், அஃது அன்புப் பொதுச் சொல்லாகப் பலருக்கும் வழங்குவது உண்டு. 'அப்பா' 'ஐயா' 'அம்மா' என்பவை முறைப் பெயர் எனினும் பொதுப் பெயராகவும் வழங்குவது இல்லையா? அதுபோல் என்க.

‘அப்பு’ விளிவடிவமாகவும் வழங்குகின்றது. ‘அப்பு நலமா?’ அப்பு எங்கே போகிறீர்கள்?” என்று இளையர் முதியர் வேறு பாடு இன்றியும் வழங்குதல் நடைமுறை.

அப்பு,என்பது ஏவல் வடிவிலும் வரும். ஒன்றோடு ஒன்றை இணைத்தல் அப்புதல் எனப்படும். அதனால் சுவரில் சாந்தை அப்பு; நான் தேய்க்கிறேன்' என்பதும், ‘எருவைத் தூணில் அப்பு' என்பதும் நாம் கேட்பவை. இவை ஏவல் வடிவுகள்.

'ஓர் அப்பு அப்பினான் பார்’ என்பதில் அப்புதல் அடித்தல் அல்லது அறைதல் தருகிறது. ஒன்றை ஒன்றில் அப்புதல் என்பது அடித்தல் தானே! ‘சோற்றை ஓர் அப்பு அப்பினான்' என்றால் வயிறு முட்ட உண்டான் என்பது பொருள்

அப்புச் சுவர் என்பது ஒட்டுச் சுவர். இயல்பாக அமைந்த சுவரில் பழுதுண்டானால் அதற்கு வலுவமையுமாறு சாந்து, மண் அப்பி வைக்கும் சுவர் அப்புச் சுவராகும்.

பழைய சுவருடன் அப்புச் சுவரும் சேர்ந்த போது அச்சுவர் கனமுடையதாக இருக்கும் அதனால் கனம், தடி என்னும் பொருள்களும் அப்புதலுக்கும் உண்டாயின. இதனால் அப்புதல் என்பதற்குப் பூசுதல், ஒற்றுதல், தாக்குதல், கவ்வுதல், சார்த்துதல், திணித்தல், உண்ணுதல் ஆகிய பொருள்களை அகராதிகள் தருகின்றன.

எருத்தட்டுவார் சாணத்தை உருட்டித் தட்டி வட்டமாகச் செய்வதைக் காணலாம். அவ்வாறு செய்வது அப்பளித்தலாகும். அப்பளித்தல் வேறு, சப்பளித்தல் வேறு. அப்பளித்தல் வட்ட வடிவானது. சப்பளித்தல் எவ்வடிவிலும் அமையும்., இவ்வப் பளித்தல் போல் மாவைப் பிசைந்து உருட்டி வட்டமாகத்தட்டிச் செய்யப்படுவது அப்படம். ‘அப்பளாம்' என்பது பிழைவழக்கு.

இனி அப்பம், ஊது அப்பம் (ஊத்தப்பம்) என்பனவும் அப்பளித்தல் வழியாக வந்தனவே.