உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. நட்பும் பகையும்

நட்பு பகை என்பவை எதிரிடைகள். 'நள்' என்பதன் அடியாக நட்பும், பக்கு பகு என்பதன் அடியாகப் பகையும் பிறக்கின்றன. முன்னது இணைதல் கருத்திலும் பின்னது பிரிதல் கருத்திலும் வருவன.

பகை என்பதற்குத் தமிழில் மிகப்பல சொற்கள் காணக் கிடக்கின்றன. அனைத்தையும் திரட்டவில்லை எனினும், அரிதின் முயன்று ஐம்பது சொற்கள் அளவு திரட்டிக் காட்டிய அகர முதலிகள் உள. ஆயின் இன்னும் அவ்வெண்ணிக்கையளவுள்ள சொற்கள் இணைக்கத் தக்கனவாக எஞ்சியுள்ளன.

பகை இவ்வாறாக, நட்பு என்பதற்கோ அவ் விரிந்த அகர முதலிகளும் கேண்மை, கேள், தொடர்பு எனச் சொல்லி அமைந்தன. இச் சுட்டும் சொல்லும் நண்பர்கள் வாய்த்தலின் சுருக்கப் பாட்டையும், பகைவர்கள் கிளர்தலின் பெருக்கப் பாட்டையும் சொல்லௗவால் சுட்டுவனவாம்!

தமிழில் அமைந்துள்ள எதிர்ச் சொற்கள் பெரும்பாலும் அடியொற்றி அமைவன. ஆதலால் பகைச்சொல் கொண்டு நகைச் சொல் அல்லது நட்புச் சொல்லைக் கண்டுகொள்ளக் கூடுவதாம்.

நட்பியலைக் கருதினால் நெருங்குதல், பொருந்துதல், கலத்தல், ஒன்றுதல், நிலைத்தல் என்னும் படிமான வளர்ச்சியைக் காண இயலும். நெருங்குதலால் பொருந்துதலும், பொருந்துதலால் கலத்தலும், கலத்தலால் ஒன்றுதலும், ஒன்றுதலால் நிலைத்தலும் நிகழ்வனவாம்.

இவ்வண்ணமே, பகையியலில் நெருங்காமை,பொருந்தாமை, கலவாமை, ஒன்றாமை, நிலையாமை என்பவை ஏற்படுதலை அறியக்கூடும். நெருங்காமையால் பொருந்தாமையும், பொருந்தாமையால் கலவாமையும், கலவாமையால் ஒன்றாமையும் ஒன்றாமையால் நிலையாமையும் ஏற்படுதல் வெளிப்படையே.