உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

இளங்குமரனார் தமிழ்வளம் 15

அண்மைக் காலத்தில் வாழ்ந்த சருக்கரைப் புலவர் என்பார், ‘ஒருவர் சொல்வதைக் காசு கொடுத்துக் கூடக் கேட்க வேண்டாம்; காது கொடுத்துமா கேட்கக் கூடாது?” என்பார்.

சொல்வதைக் கேட்க ஒருவர் இருந்தால் சொல்பவருக்கு ஓர் ஆறுதல் கிடைக்கும்! அவ்வாய்ப்பு இல்லாதுபோனால், வெந்த புண்ணில் வேல் துளைத்ததெனத் துயரேமிகும்! அதனால்தான், துயருக்கு ஆட்பட்டு வந்தவர் கேட்கப் பொறுக்காக் கடுஞ்சொல்லே சொன்னாலும் பண்புடைய அரசன் செவி கொடுத்துக் கேட்கவேண்டும்; அவ்வாறு கேட்பானாயின் அவன் ஆட்சியின் கீழ் உலகமெலாம் இனிது தங்கும்” என்றார் திருவள்ளுவர்.

"செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு

என்பது திருக்குறள்.

அடியவர் கூறும் ஆற்றாமை உரையைக் கேட்டு அருள்பவன் இறைவன். ஆகலின் அவனை அப்பரடிகள் 'சொற்றுணை' என்றார்’. நற்றுணை என்றும் நவின்றார்.

முன்னை நாளினும் இன்றை நாளில் மனநோயர் பெருகி வருவது கண்கூடு! அதிலும் முதுமையில் - செல்வாக்கு மிக்க பதவிகளில் இருந்து ஓய்வு பெற்ற முதுமையில் - மன நோயராக உழல்வார் பெருகி வருகின்றனர்! அந்நிலை பெருகாமல் தடுப்பதும் தவிர்ப்பதும் கேளிராம் தன்மையால் பெரிதும் கூடுவதாம்! ‘மனம்விட்டுப் பேச ஒருவர் இல்லையே! என்று மறுகுவார் எத்தனைபேர்கள்! இவர்கள் மனநோயர் ஆகாமல் தடுக்க வேண்டின் கேளிர், பெருக வேண்டும். இதனைக் கேட்பார் எத்துணையர்?

துணிவு : ‘துணிவு’ என்று பலரும் சொல்கிறோம். ‘துணிந்தவனுக்குத் துக்கமில்லை' என்று பழமொழி கூறுகிறோம். துணிவு என்பது யாது?

துணிவு என்பதன் பொருளை, அதன் முதனிலையே தெளிவாக்குகிறது. அதன் முதனிலை எது? ‘துணி' என்பதே முதனிலை.

ஒரு நெடும்பாவு ஓடுகின்றது ; அதில் துணித்து எடுப்பதே 'துணி' எனப்படுகிறது. அறுத்து எடுப்பதால் அறுவை எனப்