உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம்

சொல்

237

முறைமுறையே சொல்ல இன்னும் எத்தனை எத்தனையோ முறைகள் இருக்கின்றன! இருந்தும் முறையே முகத்திலே அறைந்து தள்ளி, அதன் முதுகின்மேல் 'பாந்தத்துவம் (பாந் துவம்) ஏறிக்கொண்டு உலா வருகின்றதைக் காண்கிறோம்.

தமிழில் முறைப் பெயர் ஒன்றா இரண்டா? நூற்றுக்கு மேலுண்டு! அப்பா அம்மாவுக்கு எத்தனை எத்தனை பெயர்கள்? பாட்டன் பாட்டிக்கு எத்தனை எத்தனை பெயர்கள்?

அண்ணிக்கு ஒரு பெயர் மட்டுமா? ஊரூர்க்கு எத்தனை பெயர்கள்? ஒவ்வோர் இனத்திலும் ஏன்? குடியிலும் எத்தனை பெயர்கள்? இவற்றையெல்லாம் எண்ணினோமா எண்ணித் தொகுத்தோமா? தொகுத்து எழுதினோமா? எல்லை காண வில்லை என்றாலும் இயன்றதையாவது முயன்று திரட்டினோமா? இல்லையே?

-

முறைப்பெயர், வாழ்வுக்கு அப்பாற்பட்டது இல்லையே! வாழ்வோடும் ஒன்றி உடனாகி இருப்பதுதானே! அரும்பாடு பட்டு மண்டையை உடைத்துத் தேடவேண்டியதும் இல்லையே. பக்கம் பக்கமாக நூலைத் திருப்பிப் பார்க்க வேண்டியதும் இல்லையே! அங்கங்கு அப்படி அப்படி வழங்கும் மூறைப் பெயர்களைப் பெருங்குணத்தோடும் மொழித்தொண்டு என்னும் எண்ணத்தோடும் - வரலாற்றுத் தொகுப்பு என்னும் உணர்வோடும் ஈடுபட்டால் ஒவ்வொரு வரும் தாம் தாம் அறிந்த - தமக்குத் தொடர்புடைய முதுவர் வழியாக அறிந்த சொற்களை அவற்றின் விளக்கத்தோடு வரைந்தால் எவ்வளவு பெரும்பணியாகத் திகழும்! எத்தனையோ அருமையான இனிமையான - அதே பொழுதில் தனித் தமிழுக்கு ஊற்றமான சொற்கள் கிட்டுமே! அகராதிகளிலும். புனைவு நூல்களிலும் புதிய ஆய்வுளிலும் இடம் பெறுமே! ஒரு வட்டாரத்தின் அளவில் ஓர் இனத்தின் அளவில் - ஒரு குடும்பத்தின் அளவில் அமைந்து கிடக்கும் முறைப்பெயர்கள் மக்கள் மக்கள் பொதுச் சொத்தாகப் பயன்படுமே! வருங்கால வழி முறையினர் எங்கள் முந்தையர் தந்த செந்தமிழ்வளம் என்று சிறப்பித்துப் பயன் கொள்ள வாய்ப்பாகுமே!

-

அன்பர்களே, ஆர்வலர்களே, ஆய்வுத் தலைப்பாடு உடையவர்களே, உங்கள் உங்கள் உள்ளுள் ஆட்சி செய்யும் முறைப் பெயர்களை விளக்கத்துடன் எழுதுதல் முறை சிறக்க உதவும்.