உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. அவல்

ஒரு முதுமகள்; அவள், 'அவுள்' ‘அவுள்' என்று கூவி விற்றுக்கொண்டு வந்தாள். 'அவல்' என்பதைத்தான் 'அவுள்' என்கிறாள் என்பதை நினைத்ததும் என் எண்ணம் ‘அவல்' மேல் ஆவ’ லாய்ப் பாய்ந்தது.

அவல் அருமையான உணவு; குழந்தைகளா முதியவர்களா நோயாளர்களா எவருக்கும் கேடு செய்யாத உணவு; குசேலர் கண்ணன் நட்புக்குக் குறியாய் அமைந்தது; “கைத்தல நிறை கனி அப்பமொ டவல் பொரி" எனக் கரிமுகன் படையலுக்கு உகந்தது; உடனடி விருந்திற்கா, வெளியூர்க் கட்டுணவுக்கா, உடனே வந்து உதவுவது! ‘அவல் என்றால் அவல்’ தான்!

நெல்லை நனையவைத்துப், பின்னே சிறிது உலர்த்திப் பக்குவமாகப் பொரித்து, உரலில் இட்டு இடித்து, உமி நீக்கிப் புடைத்தெடுப்பது அவல் என்பது அறிந்ததே. ஆனால். அவல் என்பதன் பெயர்க்காரணம் அறிய வேண்டுமே! ‘அவுள்' விற்ப வளைக் கேட்டுப் பயனில்லை; ‘அவுள்' இடித்தவளைக் கேட்டும் பயன்படாது! மூடை மூடையாய் ஆலையில் ‘அவல்' ஆக்கு பவர்க்கும் எட்டாது! அவல் ஆராய்ச்சி ஆலாய்ப் பறந்தது!

அவல் தமிழ் நாட்டில் பண்டு தொட்டே வழக்கில் இருந்து வரும் ஒரு சிற்றுண்டி ஆகும். வேண்டுமட்டும் அவல் தின்று தண்ணிய நீரில் ஆடி மகிழ்வதைப் புறப்பாடல்

“பாசவல் முக்கித் தண்புன லாடல்'

என்கிறது (63). கரும்பும் அவலும் விரும்பி யுண்டனர் என்பதைத், “தீங்கரும்பொடு அவல் வகுத்தோர்"

என்கிறது பொருநராற்றுப்படை (216).

அவல் இடிப்பதற்கு என்றே, வயிரமேறிய வலிய உலக்கைகள் இருந்தன என்றும், அவை 'அவலெறி உலக்கை’ பெற்றன என்றும் அறிகின்றோம்.

எனப்