உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - சொல்

39

ஆகலின், ஆய்த எழுத்தை ‘ஆயுதம், எனக் காரணம் காட்டினர்! கேடயத்தை மட்டுமா உவமை காட்டினர் ஆய்தத்திற்கு?

அடுப்புக் கூட்டுப்போல்வதோர் எழுத்து' என்று உவமை கூறினர். அடுப்புக் கூட்டும் 'ஆயுதம்' தானோ? 'சமையல் செய்தற்குக் கருவியாம் ஆகலின் பொருந்தும்? என்று பொருத்தம் காட்டவும் துணிவர்போலும்; இனி இறைவன் முக்கண்ணை ஆய்த எழுத்து வடிவுக்கு உவமை காட்டினர்! “வன்ன ஆய்தம் நேர் நாட்ட முற்ற வள்ளல்” என்பது தணிகைப்புராணம் (நைமி. 6) “மெய்யா ரணங்கள் தடவிய ஆய்த விழியினர்” என்பது பாண்டித்துரைத் தேவர் நான் மணிமாலை இறைவன் முக்கண்ணும் ஆயுதம் தானோ?

(2).

ஆய்த எழுத்தின் வடிவத்தை வீரமா முனிவர்தாம் அமைத்தாராம். அமைத்தது மட்டுமா? அதனால் தமிழைக் கெடுத்து விட்டாராம். எப்படி? “உயிர் எழுத்துக்களின் முடிவில் அடுப்புக் கட்டிகளைப்போல் 3 புள்ளிகளைக் குறித்து, அதுதான் ஆயுத எழுத்து என்றும் சொல்லி விட்டார். அதுதான் அவர் செய்த பெரும் தவறு”.

இப்படிச் சொல்பவர் யார்? அவரே சொல்லுகிறார்: “ராமலிங்கம் என்கிற தமிழ் அறிஞர் சுமார் 40 ஆண்டுகளாகத் தொல்காப்பியத்தைச் சிறப்பாக ஆராய்ச்சி செய்து வருகிறார். அவருடைய உதவியால் தொல்காப்பிய நூலைத் தெளிவாகப் படித்து ‘சத்தியகங்கை'யில் சுமார் 30 கட்டுரைகள் எழுதினேன் என்கிறார். இதைச் சொல்பவர் சத்திய கங்கை ஆசிரியர் திரு. பகீரதனார்தாம், 6.8.81 குமுதம் இதழில், “வீரமாமுனிவரால் தான் தமிழ் கெட்டது” என்னும் தலைப்பில் அவர் தந்த பேட்டி வெளியாயிற்று!

“பயமில்லாமல் சொல்கிறேன். வீரமாமுனிவர் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரைக்கும் தமிழ்ப் புலவர்கள் தான் தமிழர்களின் வளர்ச்சியைக் கெடுத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்” என்று அவர் மேலும் கூறுவது அருமையான கண்டுபிடிப்பு! தம் அருமைத் தமிழ் ஆசிரியருக்கு அன்பு மாணவர் வழங்கிய நன்றிப்படையல் இதற்கு மேலும் வேண்டுமோ?

“பகீரதர்’ குற்றச்சாட்டை மறுக்கவந்தது அன்று இக் கட்டுரை அவர் இப் 'பேட்டி' யுரையில் ஆறு இடங்களில் ‘ஆய்தம்' பற்றிக் குறிப்பிடுகிறார். ஆறு இடங்களிலும் ‘ஆயுதம்’ தான் உள்ளது. ஆய்தமே இல்லை! 'பேட்டி' தான் எனலாம்! எழுதியவர் தவறு எனலாம்.