உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. ஆய்வு

‘ஆய்வு' என்னும் சொல்லைப் பற்றி ஆய்வதே இவ் ஆய்வு என்பதன் பொருள் விளக்கம் இருவகை வழக்குகளிலும் (நூல் வழக்கு, உலகியல் வழக்கு) காணக் கிடக்கின்றது.

முதற்கண் உலகியல் வழக்கில் ஆய்வு என்பதற்குள்ள பொருளைக் காண்போம்.

'காய் ஆய்தல்' என்பதொரு வழக்கு, கொத்தவரை (சீனியவரை) என்னும் காயை ஒடித்தல் அறுத்தல் என்று கூறாமல் ஆய்தல், என்பதே நாட்டுப்புற வழக்கு. முற்றியது, பிஞ்சு ஆகியவற்றை விலக்கிக் கறிக்குத் தக்க பதனமைந்த காயைப் பறிப்பது ‘காய் ஆய்தல் எனப்படும். இது பறித்தல் நிலையில் சொல்லப்படும் ஆய்தல் ஆட்சி.

பின்னர், அக்காயைக் கறிவைத்தற்கும் ‘ஆய்தல்' உண்டு. அவ்வாய்தல், நுனிக்காம்பும் அடிக்காம்பும் அகற்றுதல்; முதுகு நரம்பு எடுத்தல்; அளவிட்டு ஒடித்தல் என்பவாம். பறிக்குங்கால் முற்றல் ஒருவேளை வந்து விடினும், அதனை இவ்விரண்டாம் ஆய்தலில் விலக்கி விடுவர். அதனால், வேண்டுவ கொண்டு விலக்குவ விலக்கல் ஆய்தல் எனப்படுகிறது என்பது விளங்கும்.

இனிக் கீரை ஆய்தல் என்பதும் வழக்கே. கீரையுள் ஒரு வகை அறுகீரை; அது அறைக்கீரை எனப்படும். அறுத்தல் என்பது அறை என்னும் பொருளில் வருதல் வருதல் இருவகை வழக்கிலும் உண்டு (எ-டு) ‘அறிவறை போதல்; அலுவலர் அறை.

கீரை ஆய்தலில் பழுத்த இலை, அழுகல் இலை அகற்றல், தண்டில் நரம்பு போக்கல், மாசு தூசு விலக்கல் என்பன வெல்லாம் நிகழும், இவ்வாறு போக்குவ போக்கி ஆக்குவ ஆ க்கல் ஆய்தலாம். ஆதலால் ஆய்தல் என்பது நுண்ணிதாய் நோக்கித் தள்ளுவ தள்ளிக் கொள்ளுவ கொள்ளல் என்பதாய் முடியும்.இவற்றை ‘ஆய்தல்' என்னும் இக்காலச்சொல்லாட்சியுடன் ஒப்பிட்டுக்காணின் உண்மை விளங்கும்.