உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. ஊர்

ஊர் என்னும் பெயர் தமிழ்நாட்டில் மிகுதி; சிற்றூர், பேரூர், ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் எனபனவெல்லாம் இன்று எங்கும் கேட்கப்படுவன.

ஊர், பழந்தமிழ்ச்சொல். தொல்காப்பியத்திலேயே ஊர்ப் பெயர் உண்டு. "ஊரும் பேரும்" இன்னும் இணை மொழி எவரும் அறிந்தது. அப்படி ஒரு நூற்பெயரும் தோன்றித் தமிழ் நாட்டு ஊர்ப்பெயர்களைச் சுவையாகக் கூறியது.

ஊர், தமிழ்நாட்டுக் குடியிருப்புப் பெயர் எனினும் தமிழ்ச் சொல் எனினும் - உலகப் பழம் பெயராகியமையை உலக வரலாறு காட்டுகின்றது. உலகுக்குத் தமிழ் தந்த கொடை அது. அண்டை அயல் நாடுகளிலும் ‘ஊர்’ப் பெயராட்சி உண்டு. தமிழ் வழக்கு இல்லா வடநாடு, திரவிட நாடுகளிலும் ஊர்ப் பெயருண்மை எவரும் அறிந்ததே. 'ஊர்' என்னும் பெயர் எப்படி வந்தது?

-

மலைமேலே வீடு எழுப்பினாலும் சரி, மலையடிப் பள்ளத் தாக்கில் வீடு எழுப்பினாலும் சரி உயரமான இடத்தைத் தெரிந்து கட்டுவதே வழக்கம். சாலையினும் வீடு மேடாக இருக்க வேண்டும் என்று திட்டப்படுத்திக் கட்டுவதும் நடைமுறை.

பள்ளத்தில் தேங்குதல் நீரியல்பு. மேட்டில் இருந்து நீர் வழிந்தோடுதலும் இயல்பு. அதனால் ‘மேட்டுக்குடி’ என்றாலும் சரி, ‘வறுமைக்குடி' என்றாலும் சரி, தன் குடியிருப்பை நில மட்டத்திற்கு மேல் உயர்த்திக் கட்டுவதே அறிவியலுடன் கூடிய நடைமுறை. அம்முறையை விளக்குவதாகச் சொல்லை முன்னையோர் படைத்துக் கொண்டமை அச்சொற் சிறப்புடன், அப்படைப்பாளர் சிறப்பையும் காட்டுவதாம்.

‘உயர்’ என்பது ‘ஊர்’ ஆகியது. இரு குறில், ஒரு நெடிலாக மாறிப் பொருள் மாறாதிருத்தல் என்பது சொல்லியன் நெறி முறைகளுள் ஒன்று. அம்முறைப்படி ஆகிய பெயர்களுள் ஒன்று ‘ஊர்’ என்பது.