உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

இளங்குமரனார் தமிழ்வளம்

15

வாளாவிருக்க விட்டு

வைக்கவில்லை. சற்றே அவனைத் தூண்டிற்று. கல்லை உடைக்கவும், அதனைக் கூர்மையாக்கவும் பாறைகளைக் குடையவும் முயன்று வெற்றியும் கண்டான். பருவகாலத்தின் கொடுமையை அழிக்கக் கண்ட கல்வீடும். கடுவிலங்கை அழிக்கக் கண்ட கற்கருவியும் அவ்வளவோடு விடாமையால் ஓய்வு ஒழிவு நேரங்களிலெல்லாம், கல்லில் சில பல உருவங்களைத் தீட்டி உவக்கும் நிலைக்கு வளர்ந்தான். இக்காலத்தும் அவன் அருவியை மறந்தான் இல்லை; அதன் ஒலியை மறந்தான் இல்லை. கல்லினின்று செதுக்கியும், துளைத்தும் ஆக்கிய அவன் தொழிலைக் ‘கல்' என்பதன் வழியாகக் கலை’ என்பதாலேயே குறித்தான் கல்லின் ளைவே கலையாயிற்று. கல் தொழிலுக்கு மட்டும் கலை என்று பெயர்வைத்த அவன் வழி வழி வந்த மாந்தர், அழகும் கவர்ச்சியும் தரும் அனைத்தையும் கலை என்ற பெயராலேயே அழைக்கலாயினர்.

கல்லிலிருந்து கலைகண்ட மாந்தன் தோண்டிச் செய்யும் அனைத்துப் பொருளையும் கலைப் பொருளாகக் கருதினான். இதனாலேதான் அவன் ஆடையாகப் பயன்படுத்திய மரத்தோலும் விலங்குத்தோலும் கலை என்ற பெயரால் குறிக்கப் பெற்றன. ஆனால் இவ்வளவு மாற்றங்களைப் பெறுமுன் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கடந்திருக்கக்கூடும். அதனால் மனிதன் அறிவும் உணர்வும் பெருகி மொழி வளமும் பெற்று உண்பதும், உடுப்பதும், உணர்வதும் அன்றி வேறு பல தேவைகளுக்கும் ஆசைகளுக்கும் ஆட்படலானான். அதன் விளைவாக அவன் சில பல பொருள்களைத் தோற்றுவிக்க முனைந்தான். இவையும் கலையழகு பெறச் செய்யப்படலாயின. இதனால் கலையழகு தவழ அவன் கண்ட பொருள்களைக் “கலம்” என்ற பெயரால் அழைத்தான். அவையே உண்கலம், அணிகலம், படைக்கலம், இவை வனைகலம், புனைகலம், தொடுகலம் என்றும் வழங்கப் பெற்றன.

கல்லெனும் ஒலி வளர்ந்து பெருகிய வகை இவ்வாறாக, இன்று கல்வி என்பதும் தோண்டி எடுப்பது என்ற பொருளொடு தான் வழங்கப் பெறுகின்றது. கல் என்னும் தோண்டுதல் பொருளில் வழங்கிய கலைமட்டும் இப்பொழுது அழகு மல்கி, உணர்வைத் தூண்டி, அறிவை வளர்த்துச் செம்மை தரும் அத்துணை வனப்புகளுக்கும் பொதுமைப் பெயராக மாறி விட்டது.