உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. கவி

“கவி? என்பது ‘குனி, கவிழ்' என்னும் பொருள் தரும் ஏவற் சொல். அது தலை கவிந்து அல்லது கவிழ்ந்து இருக்கும் குரங்குக்குப் பெயர்ச் சொல்லாயும் அமையும்.

களவு செய்து பிடிபட்டவன் ஊர்மன்றில் நிறுத்தப் பட்ட போதில் தலை கவிழ்ந்து நின்று காலால் நிலங்கிளைத்தலைக் குறிக்கிறது சங்கப்பாட்டு.

களவு காதலன் தலைவியை நோக்கினான்; அவள் நிலம் நோக்கினாள். அவள் கண்ணுக்கு ஒப்பாகேன் என்று குவளை நாணிக் கவிழ்ந்தது.

“காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கும் மாணிழை கண்ணொவ்வேம் என்று?”

என்பது திருக்குறள்

(1114)

கலங்கவிழ்தலும் கலயங்கவிழ்தலும் நாம் அறிந்தவை. அரசுகள் கவிழ்தலை இதழ்கள் வழியே எவரும் அறிவோம்!

பூனைக்காலி என்னும் செடிக்கு ‘கவி’ என்பதொரு பெயர். அதன் பூ கவிழ்ந்திருப்பதால் பெற்ற பெயர். 'கவிழ் தும்பை’ என்னும் செடிப் பெயரும் கவியும் பூவால் பெற்றதே.

கண்ணேரில் எதிர் வெளிச்சம் தாக்குகிறது. அதனைக் கண்டு ஒதுங்கவேண்டும். இயல்பாக என்ன செய்கிறோம்? நற்றிப்புருவத்தின் மேல் கையைக் கவித்துக் கண்ணை இடுக்கிப் பார்க்கிறோம். இப்பார்வையைச் சங்கப்பாடல் கவி கண்நோக்கு' என்கிறது (புறம் 3).

முகில் செறிந்து மழை பொழியும் நிலையில் தாழ்வதை வானம் கவிந்ததாகக் கூறுதல் வழக்கு. “மேகங்கவிகின்றது, மழை உடனே வரும்” என்பதைக் கருதுக.

கவிதல் என்பது கவிகம் எனவும் கூறப்படும். குதிரையின் வாயைச் சுற்றிக் கவிந்துள்ள கடிவாளத்திற்குக் ‘கவிகம்' என்பது பெயர்.