உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

இளங்குமரனார் தமிழ் வளம் - 16

4. “கண்களி மயக்கக் காதல்”

க் கட்டுரைத் தலைப்பைக் கண்டதும் “அக் காதலர் எவர்?” என்னும் வினாவே எவர்க்கும் எழுதல் ஒருதலை. ஆனால் அவர், “அந்தமில் இன்பத்து அரசாள் வேந்த”ராகிய இளங்கோவடிகளின் இனிய நண்பரும், மணிமேகலை துறவை ‘ஆறைங் காதை'யில் பாடியவரும் ஆகிய தண்டமிழ் ஆசான் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரே எனின் வியப்புத் தோன்றக்கூடும். உண்மையில் சாத்தனாரே ‘கண்களி மயக்கக் காதலர்’ என்பதை அடிகளாரே கூறிய பின்பு ஐயுறுதற்கு அணுத்துணையும் இடமில்லை.

உண்டார்க்கே உள்ளக்

கள்ளும் நறவும் முதலாயின களிப்புண்டாம். ஆனால் காண்டற்கரிய காட்சிகளைக் கண்டவர்க்கும் ‘கண்களி’ யுண்டாம். மையலுற்றார்க்கே மயக்கம் உண்டாம்; எய்தப் பெறாத இன்பம் ஓரிடத்தில் எய்தியவர்க்கே காதல் உண்டாம். இம்மூன்றும் ஒருங்கெய்தப் பெற்றார்க்கே கண்களி மயக்கக் காதல் தோன்றும். அவ்வாறு தோன்றப் பெற்றாரே கண்களி மயக்கக் காதலர் ஆவர். சாத்தனார் அந்நிலையை எப்போது எவ்விடத்து எந்நிலையில் உற்றார்?

மலைவளங் காணச் சென்ற செங்குட்டுவனுடன் இருந்த மதுரைச் சாத்தனார், அவன் முன்னிலையிலேதான் கண்களி மயக்கக் காதல் கொண்டு திகழ்ந்தார்.

வஞ்சி முற்றம் நீங்கி, அஞ்சாமுழவின் அருவி ஆர்க்கும் மஞ்சுசூழ் சோலை மலைவளம் காணுதற்குக் கோப்பெருந் தேவியும், அவர் ஆயமும், தன் பரிவாரங்களும் புடைசூழ நெடுவேலான் குன்றம் நண்ணிய செங்குட்டுவன், நெடியோன் மார்பின் ஆரம் போல விளங்கிய பேரியாற்றின் இடுமணற் பரப்பின் மேல் இனிது தங்கினான். அப்பொழுது உடனிருந்த சாத்தனார் கண்களி மயக்கம் கொண்டார் என்றால் எதனால் என்னும் வினா எவர்க்கும் எழும்பும்.

கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பாம் மலைக் காட்சி சாத்தனாரைக் கண்களி மயக்கக் காதலில் ஆழ்த்தியதா? அரிமாவன்ன ஆற்றலும் தோற்றமும் அமைந்த செங்குட்டுவன் பொலிவுதான் கண்களி மயக்கக் காதலில் ஆழ்த்தியவா? அரசியின் ஆயமும் அரசியல் சுற்றமும்தாம் அக் காதலில் ஆழ்த்தினவா? வென்றிச் செவ்வேள் வேலன் பாணி முதலாகப் பக்கமெல்லாம் பரவியெழுந்த பல்வேறு ஒலி முழக்கங்கள் தாம்