உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

123

கொடையளி செங்கோல் குடியோம்பல் ஆகிய நான்கும் பேணாத அரசும், ஆட்சியும் கேடுபயப்பனவன்றி நன்மை பயவா என்றும், கோன்நிலைதிரியின் கோல் நிலை திரிந்து கோள் நிலையும் திரியும் என்றும், ஆள்வோர் செம்மையால்தான் ஆட்சிக்கு உட்பட்டோருக்கு நலம் விளையும் என்றும் அடிகள் உணர்த்துகின்றார் என்றாதல் வேண்டும். அரசியல் பிழைத்தோரை அறம் கூற்றாக இருந்து மடியச் செய்யும் என்பது அடிகள் நூல் பாடுவான் புகுவித்த முப்பெருங் காரணங்களுள் ஒன்றன்றோ! இத்தகைய அடிகள் நூலின் தொடக்கத்திலேயே “அறநெறி முதற்றே அரசின் கொற்றம்” என்று எண்ணுமாறு செய்வித்தல் ஏற்புடையதே என்று அறியலாம். ஆகலின் மங்கல வாழ்த்து, மன்னர் கடைப் பிடிக்க வேண்டிய அறநெறிகளை வாழ்த்து முறையால் கூறும் பகுதி என்பது விளக்கமாகும்.

அடிகள் அறத்தை உயிரெனக் கொண்டவர். அறத்தின் வழியே அரசியல் இயங்க வேண்டும் என்று கருதுபவர். அவ்வாறு இயங்கினால் மாந்தரும் அறநெறி வழியே செல்வர் என்னும் அசையா உறுதி உடையவர்; அறத்தை நிலை பெறுத்து மாறும் மறத்தைக் கடிந்து ஒதுக்குமாறும் செய்தற்கு இலக்கியமே உயரிய கருவி என்று தெளிந்தவர். இவற்றுக்கு ஏற்ப அறவாழ்த்துப் பாடி நூலைத் தொடங்குகின்றார்.

“கோள் நிலை தவறாது! அப்படி ஓரோர் வேளை அது தவறு படினும் 'கோன்நிலை' தவறவே கூடாது. தவறுமாறு நேரின் குற்றமற்ற கோவலன் போல்வோர் கொலைக்களம் குறுகி - மடிவர் என்று எதிர்கால உலகம் உணரவேண்டும் என்று அறநெறி தவறியது பற்றி விவரிக்கும் காப்பியத்தின் தொடக்கத்தில் அறநெறியை அழகு பெற வைக்கின்றார் அடிகள். உணர்வார்க்கு இன்பம் பயவாமல் போகாது அடிகளின் மங்கல வாழ்த்து!

8. சிலம்பில் சில பாடங்கள்

சிலப்பதிகாரத்தின் முதற்பதிப்பு 1876 இல் வெளி வந்தது. அது புகார்க்காண்டம் மட்டுமே உடையது; மூலம் மட்டுமே உள்ள பதிப்பு.

சன்னை மாநிலக்கல்லூரி

முதன்மைத் தமிழ்ப்

பேராசிரியர் தி. ஈ. சீனிவாச ராகவாச்சாரியார் வெளியிட்டார். ஊ. புட்பரத செட்டியாரின் கலாரத்நாகரம் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது.