உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

இளங்குமரனார் தமிழ் வளம் 16

சொல்" என்று சங்கரநமச்சிவாயரும், முகவை இராமாநுசக் கவிராயரும் நன்னூலின் உரைக்கண் விளக்கியதை உன்னுக.

இவற்றால், கொலைத் தொழில் கொண்டு கொற்கைப் பெயர் பெற்றிருக்க இயலாது என்றும், கொல்லுத் தொழில் கொண்டே கொற்கைப் பெயர் பெற்றிருக்க வேண்டும் என்றும் துணிக.

கொல்லுத் தொழில், பயில வழங்கும் தொழிலாயிற்றே, அதன் பெயரால் ஓர் ஊர்ப் பெயர் அமைதல் சாலுமோ எனின், ஆய்ந்து கொள்ளத் தக்கதேயாம்.

அலைவாய்க் கரையில் அமைந்த ஊரெல்லாம் அலைவாய் என்னும் பெயர்க்கு உரியவையாயினும் ‘திருச்சீரலைவாய்' எனத் திருச்செந்திலும், அலைக்கரை வாயெல்லாம் ஒலியெழுப்புதல் உண்டு எனினும், 'தரங்கம் பாடி' என ஓர் ஊரும், கடல் முனைக் கோடியெல்லாம் கோடிக்கரை எனினும், 'கோடிக்கரை’ என ஓர் இடமும் உளவாதல் போலப் பலப்பல இடங்களிலும் கால்லுத் தொழில் நிகழுமாயினும் யாதானும் ஒரு தனிச் சிறப்பு உண்மையால் அத்தொழில் தொடர்பாக ஊரின் பெயர் இடப் பெற்றிருத்தல் வேண்டும் என்க. அவ்வாறு தனிச் சிறப்பாகக் கொல்லுத் தொழில் நடந்ததேயாமாயின், அதுதான் யாது' என்பதை அறிவதே நிறுவும் சான்றாகும்.

பொன்வகை ஐந்தென முந்தையோர் கண்டனர். அவை ரும்பு, ஈயம், செம்பு, தங்கம், வெள்ளி என்பன. அவற்றைக் கொண்டு பணிசெய்வோர் 'பொற்கொல்லர்' எனப் பெற்றனர். 'பொன் செய்கொல்லர்(ன்), எனச் சிலம்பு கூறும் (5: 31: 20: 74) கொல்லுத் தொழில் செய்து கொண்டு கொழுந்தமிழும் வளர்த்த சான்றோர்கள் தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார், மதுரைக் கொல்லன் புல்லன், மதுரைக் கொல்லன் வெண்ணாகனார், மதுரைப் பெருங்கொல்லன் என்பார் என்பது பெயரளவானே புலப்படும்.

படைக்கலம் முதலாம் கருவிகள் செய்தல், அணிகலம் உண்கலம் முதலாம் கலங்கள் செய்தல், தெய்வத் திருவுருச் செய்தல் என்பவை சீறூர் பேரூர் இடங்களிலெல்லாம் நடை பெறும் கொல்லுத் தொழில்; ஆனால், இவ்வாறு பொதுமைக் கொல்லு நீங்கிய தனிமைக் கொல்லு ஒன்று உண்டு. அது ‘காசு’ என்னும் நாணயம் செய்யும் கொல்லுத் தொழிலாம். காவலரால் நிறுவப் பெற்றுக் கட்டுக் காவலுடன் செய்யப் பெறுவது