உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

தமிழ் வளம் பொருள்

139

கோயிலின் முன்னே பெரும் பரப்புடைய குளம் ஒன்று காட்சி வழங்குகின்றது. அது கொடுங்கணி, கொற்கை நிலங்களைப் புரக்கின்றது. நீர் நிரம்பி வழியும் காலத்தே அதனைப் பார்க்க வேண்டும்! பச்சைப் பசேல் என நெல்லும், வாழையும், தென்னையும் இடைவெளியறச் சூழ்ந்து விளங்கும் சூழலின் இடையே, பரந்து கிடக்கும் நீல நீர்ப் பரப்பு எத்தகு எழிற்காட்சி வழங்கும்.

கரைமேல் நின்று காண்கிறோம். குளத்தின் இடையே ஒரு கோயில்! நம் குறிப்பை அறிந்து அன்பர் ஐயாத்துரை 'செழிய நங்கை' கோயில் என்கின்றனர். இது ‘செழிய நங்கை கோயில்’ “வெற்றிவேல் அம்மை” என்று வழங்குவதும் உண்டு என்கிறார். சிலம்பின் மெல்லொலி நம் செவிக்குள் பட்டுச் சிந்தையுள் அள்ளூரி மகிழ்கிறோம்! ஆம்! ஆம்! "கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன்” பெயர் விளக்கும் அம்மை என்பதை எண்ணி இளங்கோவடிகளார் பொன்னடிகளைப் பூரிப்புடன்

நினைந்தேத்துகிறோம்.

கோயிலின் முன்னர் உடைந்து கிடக்கும் சிலைகளைக் காண்கிறோம். கடற்பாசியும் சங்கும் பிறவும் கல்லாகிப் போக அக்கல்லைக் கொண்டே வடித்த சிலைகள், உடைந்து கிடக் கின்றன. அவை பேணுவாரற்றுக் கோயிலின் உள்ளேயும் இருக்க வகையற்று, வெளியில் கிடப்பதைப் பார்த்துத் துன்புறுகிறோம். 'ஒரு முலை இழந்த திருமா பத்தினி' சிலையொன்று முன்னே உடைந்து கிடந்த செய்தியை உள்ளூர் அன்பர்கள் உரைக் கின்றனர். நெக்குருகுகின்றனர். “படைக்கத் திறம் கெட்ட கைகள், உடைத்துக் கெடுக்கின்றனவே! இவற்றைத் தடுத்துப் போற்றிக் காக்கவும் நாடு திறனற்றுப் போயிற்றே" என்று நோக்குகின்றோம்.

கோயில் சூழலைப் பார்க்கிறோம். சூழலெல்லாம் பழங் கட்டடப்பகுதிகள்! கட்டடச் சான்றுகள்; பெரிய பெரிய செங்கல் தளங்கள்! ஆழத்தில் பதிந்து கிடக்கும் சுவர்கள்! இவையெல்லாம் அக்கசாலைத் தெருக்கள். "பதின்மூன்று தெருக்கள் இங்கு இருந்தனவென்று செவிவழிச் செய்தி" என்கிறார் அன்பர் சண்முக சுந்தரம். அக்கசாலை ஈசுவரர் கோயிலுக்கு முன்னுள்ள பரப்பைப் பார்த்து இருக்கலாம், என ஏற்கிறோம். அப்பொழுது குளத்தின் வடபாற் கரையோரம் உள்ள ஊரைக் காண்கிறோம். அதன் பெயரை வினாவுகிறோம். 'அக்கசாலை' என்கிறார்கள். அக்கசாலை அக்காசாலை யாகியதை உணர்கிறோம். நமக்குப் பட்டொளி வீசிப் பறப்பது போல உணர்வு ஏற்படுகின்றது.