உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் – பொருள்

149

கண்ணகியார் விண்ணவர் போற்ற - குன்றக்குறவர் காண - விண்ணுலகு புக்கார்.

அவர்தம் சீற்றத்தால் மதுரை மாநகர் அலக்கண் உற்றது. பாண்டியர் குடிக்குப் பழியும் மாநகருக்கு வசையும் உற்றன.

கண்ணகியாரைத் தம் இல்லில் வைத்துப் பேணிய மாதரியார், "அடைக்கலம் இழந்தேன் இடைக்குல மக்காள்' என்று கூறி எரிவளர்த்து அதில் மூழ்கினார்.

கண்ணகியாரையும் கோவலனையும் மதுரைக்கு அழைத்து வந்த துறவி கவுந்தியடிகளார், நிகழ்ந்தது தாங்காமல் வடக்கிருந்து உயிர் துறந்தார்.

மதுரையில் நிகழ்ந்ததை அறிந்த கோவலன் தாயும், கண்ணகியின் தாயும் மூச்சடங்கினர். கோவலன் தந்தையும் கண்ணகியார் தந்தையும் துறவு கொண்டனர்.

மாதவியார் துறவு பூண்டார்; மகள் மணிமேகலையைக் "கோதைத்தாமம் குழலொடு களைந்து, போதித்தானம்” புகுவித்தார்.

மதுரைச் செய்தியைப் புகார்க்குக் கொண்டு சென்ற மாடலன் தன் சொல்லால் நேர்ந்த நேர்ச்சியறிந்து தீர்த்தச் செலவு மேற்கொண்டான்.

பொற்கொல்லர் உள்ளம் புண்பட்டு, கண்ணகியார் சினந் தணிதற்கு உயிர்ப்பலியூட்டிக் குளுமை செய்தனர்.

செய்தியறிந்த செங்குட்டுவன், வடநாட்டுப் படையெடுப்பு மேற்கொண்டு பெரும் போராற்றிப் பேரழிவு புரிந்து, கண்ணகியார்க்குக் கோயிலெடுத்து வழிபாடு செய்தான்.

இவ்வெல்லாம் மெல்லியல் தன்மைகளா? மெல்லியல்

சிலம்பின் நேர்ச்சிகளா? இல்லை! இல்லை!

"சிலம்பு மெல்லியதே எனினும் இச்சிலம்பு வல்லிதில் வல்லிதாய்க் கொடுமைகளுக்கு இடனாகியுள்ளது. ஆதலால், இக்காவியத்தைக் கற்கக் தொடங்குவார் எடுத்த எடுப்பிலேயே இவ் வன்கண்மையை ஒளிவு மறைவு இன்றி அறிந்துகொள்ளும் வகையில், சிலம்பைச் சிலப்பாக்கி வலித்தலுண்மை காட்டுவேன்” என்று, பெயர்ச் சூட்டுச் செய்துள்ளார் இளங்கோவடிகளார்! வலித்தல் விகாரம்’ என இலக்கணம் கூறுவதற்காகவா இப்பெயர்ச்சூட்டு? அடிகளார் எத்தகு திறவோர்!