உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

155

பற்றிக் கவலைப் படுவது இல்லை. அப்படி எண்ணுபவரே கிறுக்கராகவும் வாழத் தெரியாதவராகவும் அவன் பார்வையில் தோன்றுகின்றனர். “பித்தனும் புலவனும் மெத்தவும் ஒப்பர்' என்பது மானவிசயம். இறைவனே ‘பித்தன்' ஆனான்! புலவன் பித்தன் ஆனால் என்ன? பின்னுமோர் பேயன் ஆனால்தான் என்ன? அழியா வாழ்வாளன் அவனல்லனோ!

2. புலவர் புகழ்ச் செந்நா

புலவர் நா, புகழ் நா, அது செவ்விய நா: மறந்தும் பிறன் கேடு சூழாத நா; உலக நலங் கருதி உரைக்கும் உயர் நா; உருகி உருகி நிற்கும் உள்ளத்தின் ஊற்றுக் கண்ணுக்கு உருக்கொடுத்து உயர்ந்தோங்கும் நா! அந்நா பேரருட் பெருக்கத்தின் உறைவான நெஞ்சத்தின் வழிப் பட்டதாகலின், மொழித் திறம் சிறந்து, “கூறத் தக்கன இன்ன, கூறத் தகாதன இன்ன, கூறும் பான்மை இன்ன என்றவெல்லாம் உணர்ந்து சொல்லும் நன்னெறிப் பட்டதாகும்.

முழுமுதல் இலக்கண நூலாசிரியராகிய தொல்காப்பியனார் நனி நாகரிகச் செந்நாவினர். அவர் சில எழுத்துக்களை விரித்தோதுங்கால் அவற்றின் பெயரையும் வெளிப்படக் கூற விரும்பாராய்க் குறிப்பால் உரைத்துளார். அத்தகைய எழுத்துகளை “உப்பகாரம்" (உகரத்தோடு கூடிய பகரம்; ‘பு’) “உச்சகாரம்” (உகாரத்தோடு கூடிய சகரம்! என்றது ‘சு’)! “பவ்வீ” (ஈகாரத்தோடு கூடிய பகரம்; என்றது ‘பீ') என்கிறார், சிறு நீர் என்று நாம் வழங்குவதை அவ்வாறே கூற விரும்பாத புலமையாளர்களாகிய உரையாசிரியர்கள் ‘நீரல் நீர்’ என்றும், அதன் ஈரப்பதத்தை ‘நீரல் ஈரம்' என்றும் குறித்தனர்.

66

வழக்குகளில் ‘மங்கல வழக்கு' என ஒன்றை இலக்கணம் வல்லார் போற்றினர். அது மங்கலம் இல்லாததை மங்கலமாகக் கூறும் சிறப்புடையதாகும்.

"செத்தாரைத் துஞ்சினார் என்றும், ஓலையைத் திருமுகம் என்றும், காராட்டை வெள்ளாடு என்றும், சுடுகாட்டை நன்காடு என்றும், தீய பாம்பை நல்ல பாம்பு என்றும் வழங்கும் இவை போல்வன மங்கலம்” என்று எடுத்துக் காட்டுத் தந்து இலக்கண உரையாசிரியர்கள் விளக்குவர்.

இலக்கிய ஆசிரியர்களோ தாம் எடுத்துக்கொண்ட காவிய மாந்தர்களின் நிகழ்ச்சிகளைக் கூறுமிடத்தே நயம் பெறக் காட்டி அமைவர்.