உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

இளங்குமரனார் தமிழ் வளம்

16

என்பதை, ‘நெஞ்சை ஒளித்தொரு வஞ்சகம் இல்லை' என்பர். பொய் கூறுதலை விலக்குவாரும், 'நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டா' என்பர். வெறுங் கல்வியுடையவனை 'நெஞ்சிலக்கணம் அறியாதவன் பஞ்சலக்கணம் அறிந்தும் பயனென்?' என இழித்துரைப்பர். ‘அழகாவது நெஞ்சத்து அழகே’ என அழகினை அறுதியிட்டு உரைப்பர். நீதியை வேண்டுவாரும், 'நெஞ்சிலே கை வைத்துக் கூறு' என்று ஆணையிடுவர். 'நெஞ்சினால் பிழைப்பிலாள்' எனப் பாவக் கழுவாய்க்கு நெஞ்சு உதவுதலையும் கூறுவர். மெய்யுணர்வுப் பெருக்கால், 'நெஞ்சம் பெருங்கோயி’லாகக் கண்டு ‘நெஞ்சம் உமக்கே' என இறைவனுக்குப் படையலாக்கி இறைஞ்சுவர். இன்னவையெல்லாம் உலகம் நெஞ்சுக்குத் தரும் மதிப்பின் வெளிப்பாடுகளேயாம். ஆனால் பலர் வாழ்வில், 'நெஞ்சு என்ப தொன்றுண்டோ' என்பது வினாவாகவேயுள்ளது.

சுடுசோற்றை அள்ளினாள் ஒரு தலைவி; அள்ளியதை அப்படியே தட்டத்தில் போட்டாள். ஏன்? கைசுட்டு விட்டதா? ல்லை. சுடு நெருப்பிலே சோறாக்கிச் சுடச்சுட வடித்துச், சூட்டிலே இறக்கிச் சுவைப்படுத்தத் தேர்ந்த அவள் கை, சூட்டைத் தாங்காமலா போய்விடும்? சோறு கையைச் சுடவில்லை! நெஞ்சைச் சுட்டு விடுமாம் அப் பஞ்சின் மெல்லியலாளுக்கு! நெஞ்சச் சூடு, அவள் நெஞ்சங் கவர் கள்வனாகி நெஞ்சிலே வீற்றிருக்கும், நேயக் காதலனைச் சுட்டு விடுமாம்! ‘அவன் வெந்துவிடக் கூடாதே' என நொந்து உண்ணவில்லையாம்! 'வள்ளுவர்' வரைந்த 'நெஞ்சக் காதல்' கொஞ்சிக் குலவும் ஓவியங்களுள் ஈதொன்று!

அவன் எழுதுகிறான் ஓர் ஓவியம்; சுவரிலா? இரட்டுத் துணியிலா? தாளிலா? இல்லை. உள்ளத் திரையில் எழுதுகிறான். தண்ணீர் வண்ணமோ எண்ணெய் வண்ணமோ எடாமல் தண்ணிய எண்ண வண்ணம் ததும்ப எழுதுகிறான் ஓவியம். எழுதுவதும் எப்படி? ‘அழகு என்றால் அழகு’ ‘இதுவே அழகு என்று சொக்குமாறு அந்தச் சொக்கன், சொக்கியை எழுதுகிறான்! அப்படிச் ‘சொக்குப்பொடி' போட்டு மயக்கி இருக்கிறாள் அவள். எழுதப் பெற்ற ஓவியம் எவருக்கோ எழுதப் பெற்றதோ? இல்லை! அவனுக்கு என்றே எழுதப் பெற்றது! அதனையும் மூடி மறைத்துப் பொதிந்து வைத்துக் கொள்ளாமல் இமைத்த கண் மூடாமல் 'இமையா நாட்டப் பெரியோனாய்' நோக்கிக் கொண்டிருத்தற்கே எழுதுகிறான்.