உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

தோன்றினான். அவன் விரும்பும் விழுமிய அன்பும் புலவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ன. அவனை, 'நி நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து' மகிழ்ந்தார். 'உள்ளுதோறும் உள்ளுதோறும்' உவகை ஊற்றெடுக்க உறவாடினார்; உரிமை அன்பு நோக்கி உருகினார். அந்நிலையில் ஆதனுங்கன் ‘எம்மை உள்ளுமோ' (எம்மை நினைப்பிரோ) என வினாவினான். அவ் வினாவினால், புலவர் வியப்பும் விம்மிதமும் ஒருங்கே எய்தினார்.

"வேந்தே! நின்னை நினைப்பது எப்படி? நின்னை மறந்தால் அன்றோ நினைக்க முடியும்? மன்னவ! நுண்ணிய கருவி கொண்டு என் நெஞ்சைத் திறந்து காணவல்லார் ஒருவர் உளராயின், அவர் அங்கே என்ன காண்பார் என்பதை அறிவையோ? நின்னையே காண்பர். இன்னுங் கேள். என்னினும் எனக்கு இனியவனே!, நீ வினாவியது போல் நின்னை மறப்பேன்; ஆம். மறப்பேன். என் உயிர் என் உடலினின்றும் பிரியும்போது கூட என் நினைவு உள்ளவரை நின்னை மறவேன். என்னை மறந்து போவேன் ஆயின், அண்ணலே, என் செய்வேன்! அப் பொழுதே மறப்பேன்! இரங்கத்தக்க அந்நிலையிலே என் செயலாவது என்னே! இயம்புவாயாக” என்றார்.

“எந்தை வாழி ஆத னுங்கவென்

நெஞ்சம் திறப்போர் நிற்காண் குவரே நின்னியான் மறப்பின் மறக்குங் காலை என்னுயிர் யாக்கையிற் பிரியும் பொழுதும் என்னியான் மறப்பின் மறக்குவென்”

என்பது ஆத்திரையனார் வாக்கு.

(புறம். 175)

அரசன் ஆதனுங்கன், புலவன் ஆத்திரையன்; புரவலன் ஒருவன், இரவலன் ஒருவன்; மாடமாளிகைக்குரியவன் ஒருவன், கூரைக் குடிசைக்குரியவன் ஒருவன்; அண்ணல் யானை அணி தேர்ப்புரவி ஆட்பெரும் படையாளன் ஒருவன், ஏடு எழுத்தாணி கொண்டு பாடு தொழிலாளன் ஒருவன்; இரைவேட்டெழுந்த புலி போன்ற இயல்பாளன் ஒருவன்; கலைந்தோடும் மான் போன்ற தன்மையாளன் ஒருவன்; செல்வம் செல்வாக்கு, பட்டம் பதவி, பழக்க வழக்கம் இவற்றால் அமைந்த இடை வளி பெரிதாயினும், நட்புரிமை அவற்றை அகற்றி நெஞ்சந்திறக்கும் நெருக்கத்தை அமைத்துவிட்டது! இத்தன்மை எதற்கு உண்டு? காதல் நட்புக்கே உண்டு. ‘அந்த உணர்வு எங்கே? எங்கே?' என்று அலமர வைக்கிறது இன்றைய உலகம்!