உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

189

துரவும் சூழ்ந்த சிறு குடியாளி. இத்தனை வேறுபாடுகள் இருப்பினும் நெஞ்சார்ந்த வாழ்த்துப் பிறக்கிறது. நெஞ்சுக்கு வேண்டுவது உண்மை! உண்மை கண்ட இடத்து, நெஞ்சு, கொஞ்சி விளையாடுவதும் உண்மை!

பெருநடை நடந்து சிறு குடியை நெருங்குகிறான் வேந்தன். செல்லும் வழியில் முட்ட நிரம்பிய வயிற்றொடு, கிட்ட நெருங்கி வருகிறது ஒரு கூட்டம். அவர்கள் அகத்து மகிழ்ச்சி முகத்து வெளிப்படுகிறது. அவர்கள் பாடிப் பிழைக்கும் பாணர்கள்!

L பாணர்களை நோக்கிய அதே பொழுதில் ஓர் அரவம் வேந்தன் செவியில் கேட்கிறது! முட்டைகளைத் தூக்கிக் கொண்டு, திட்டை மேலே ஏறும் எறும்பு வரிசைகள் போலச் சோற்றுக் கலங்களைத் தாங்கிக்கொண்டு, இப்பாலும் அப்பாலும் வரிசை வரிசையாகச் சிறுவர்கள் செல்வதைக் காண்கிறான்! “இந்த அரவம் எங்கே இருந்து வருகிறது? இச் சிறுவர்கள் எங்கிருந்து எங்கே போகிறார்கள்? நான் தேடிவரும் சிறுகுடி அணித்தே தோன்றும் இவ்வூரோ? அன்றி வேறோர் ஊரோ?” எனத் திகைக்கிறான்! அவன் திகைப்பை வினாவாக்கிப் பாணர்களிடம் கேட்கிறான். தான் பார்க்க வந்த பண்ணன் சிறுகுடி ஈதே என்றும் பண்ணன் வழங்கிய உணவை உண்டு மகிழ்வார் ஒலியும், கொண்டு செல்வார் வரிசையுமே தான் கேட்பதும் காண்பதும் என்றும் அறிந்து கொள்கிறான்.

நாட்டின் பசியும், பிணியும் பகையும் நலிவும் இல்லாமல் காக்க வேண்டுவது காவலனாம் என் கடன்! என் கட கடமை என்னைப் பார்க்கிலும் இவனல்லவோ நன்றாகச் செய்கின்றான். என் கடனை நானே செய்தலில் என்ன சிறப்பு இருக்கிறது? ‘என் கடமையைச் செய்தேன்' என்ற அளவில் ஓர் நிறைவு. அவ்வளவே. ஆனால், இவன் செய்வதோ, உயிர் இரக்கம் ஒன்றாலே செய்யும் உயர்வற உயர்ந்த உயர் செயல்! இவனன்றோ உலகை வாழ வைப்பவன்? வாழவைப்பதற்காக நெடிது வாழ வேண்டியவன்?

பண்ணன்! ஆ! ஆ! பண்ணன்! இப்பெயர் எத்துணைப் பேர் இசைத்து மகிழ்ந்த பெயர்! இசைந்து வழங்கிய பெயர்! இசை எவரையும் இசைய வைப்பது! இவ்விசையாளன் தன் இனிய கொடையால், இசை போலவே எவரையும் இசைய வைத்துள்ளான்! பண் அன்னவனை எப்பெயரால் அழைப்பது? பண்ணன்' என்பதே தகும் நல்லவற்றைத் தேர்ந்து தேர்ந்து பண்ணும் நல்லோனைப் ‘பண்ணன் என்றது எத்தகைய பொருத்தம்! பண்ணன் வாழ்க! ‘பண்ணவன்’ வாழ்க! பண்ணையாளனாம் இவன் வாழ்க!