உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

இளங்குமரனார் தமிழ் வளம் - 16

என்னும் 1302 ஆம் குறளுரையில், “புலவி கலவியின்பஞ் செயற்கு வேண்டும் அளவிற்றாதல். உப்பு துய்ப்பனவற்றை இன்சுவை யாக்கற்கு வேண்டுமளவிற்றாதல்" என்று அச்சுப் பாடத்தில் இருந்தது. ஆனால் திருச்சுழியல் ஏட்டுப் படியில், 'இன்சுவை யாக்கற்கு' என்பது ‘இன்சுவைய வாக்கற்கு' என்றுண்மையைக் கண்டு மகிழ்ந்தார் இராகவர். உப்பு இன் சுவையாக்குதலிலும், இன்சுவையுடைய தாக்குதல் தெளிவுடையதன்றோ! ‘பாலொடு தேன்கலந் தற்றே' என்னும் குறளில் வரும் "வேறு வேறு அறியப்பட்ட பல சுவைய வாய் பாலும் தேனும்” என்னும் பரிமேலழகர் உரையைக் கண்டு தெளிவுறுமாறும் சுட்டினார். அச்சிட்ட சுவடிகள் அனைத்தையும் தமக்குக் கிடைத்த ஏட்டுச் சுவடிகள் அனைத்துடனும் அயராமல் ஒப்பிட்டுக் கண்டு அவர் வெளிப்படுத்தியவை இம் மூன்று உண்மைப் பாடங்களாம்; எஞ்சிய சிலவும் இருந்திருக்கலாம்! ஏட்டுச் சுவடிகளை அச் சிட்ட நூல்களொடு ஒப்பிட்டுப் பார்க்கும் ஒருமரபு இன்று போற்றப்பெறினும் கூட, இன்னும் சில உண்மைப் பாடங்கள் கிடைக்கக்கூடும் என்பது பெரும்புலவர் இரா. இராகவர் எடுத்துக் காட்டிய அரிய சான்றுகளால் புலப்படுகின்றது. இவ்வாறு அவர் எடுத்துக் காட்டியது கைம்மேல் கனியாகப் பயனாயிற்று என்பதே குறிப்பிடத்தக்கதும் மகிழத் தக்கதுமாம்.

செந்தமிழ் முதற்றொகுதி பன்னிரண்டாம் பகுதியில் வ்வாராய்ச்சிக் குறிப்பு வெளி வந்தது. அது சோபகிருது ஆண்டு ஐப்பசித் திங்களாகும். அதற்குப் பின் (1903) அச்சிடப் பெற்ற திருக்குறள் பரிமேலழகர் உரைப் பதிப்புகள் எல்லாம் இத் திருத்தத்தை ஏற்றுக்கொண்டு வெளிப்பட்டன. செந்தமிழும், செந்தமிழ் இதழாசிரியரும் செய்த இப்பணி, நாடு தழுவிய பணியாகி மலர்ந்தது. ஆதலால் ஏட்டுச் சுவடிகளை ஆய்ந்து கண்ட உண்மைப் பாடங்களைத் தமிழுலகு அறியுமாறு செய்தலும், செய்வித்தலும் அறிஞர் கடமையாம். இவ்வாறு செய்யாமையால் ஏற்பட்டுள்ள பயனின்மையையும், குறை பாட்டையும் குறுந்தொகைச் சுவடியாய்வு ஒன்றால் காண்போம்.

ஈ. குறுந்தொகையில் மூல பாடங்கள்

.

குறுந்தொகையை முதன்முதல் பதிப்பித்த ஆசிரியர் 'திருக்கண்ணபுரத்தலத்தான் திருமாளிகைச் சௌரிப் பெருமாள் அரங்கனார்’ ஆவர். அவர் பதிப்பு 1915 இல் வெளி வந்தது.