உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

தமிழ் வளம் பொருள்

227

பிள்ளையும் என்ற ஆசிரியர், அப் பெயர்கள் தவழ்வன வற்றுக்கும் உரிமையாதலைக் கண்டு, "தவழ்பவை தாமும் அவற்றோரன்ன” என்றார்.

பின்னர்க், குட்டி என்னும் இளமைப் பெயரைக் கூறுவாராய், மூங்கா (கீரி), வெருகு, எலி, அணில் என்னும் நான்கும் குட்டி என்னும் இளமைப் பெயரைப் பெறும் என்றார். இந்நூற்பாவை அடுத்து, “பறழ்எனப் படினும் உறழாண் டில்லை" என்னும் நூற்பா இடம் பெற்றுள்ளது. இதனால், மூங்கா முதலிய நான்கும் குட்டி என்னும் பெயருடன், பறழ் என்னும் பெயரும் பெறும் என்றாகும். ஆனால் மூங்கா வெருகு எலி அணில் என்பவை ‘பறழ்' என்னும் பெயர் பெற்றதற்குரிய எடுத்துக்காட்டு எதுவும் உரையாசிரியர்க்குக் கிட்டிற்றில்லை. "இவை இக் காலத்து வீழ்ந்தன” என்றார். அணிற்பறழ் என்று இயைத்துக் கூறினாரே அன்றி, எடுத்துக் காட்டுக் காட்டினார் அல்லர்: காட்டு இருந்தால் அன்றோ காட்ட இயலும்?

பறழ் என்னும் இளமைப் பெயர் மந்திக்கு வருதலை அறிந்து பேராசிரியர், “பறழ் எனப்படினும் உறழாண்டில்லை என்பதிலுள்ள “உறழாண்டில்லை” என்னும் மிகையால் மந்திப் பறழை எடுத்துக்காட்டி அமைத்துக் கொண்டார்.

மந்தி, பறழ் என்னும் இளமைப்பெயர் பெறுதல் பெரு வழக்காம். “துய்த்தலை மந்தி வன்பறழ்” (நற். 95), “புன்றலை மந்தி வன்பறழ்” (நற். 163) என்றும் பிறவாறும் (நற். 233. 379; குறுந். 69; ஐங்குறு 272, 273) வழங்கப் பெறுகின்றன. குரங்கின் பறழ் (ஐங். 278), கடுவன்பறழ் (குறுந் 26) என்பனவும் வழங்குகின்றன.

இங்குக் குறித்தவற்றால், பறழ் என்னும் இளமைப் பெயர் மூங்கா முதலிய நான்கும் கொண்டதற்குச் சான்று இல்லை என்றும், மந்தி குரங்கு கடுவன் என்பவை பறழ்ப் பெயர் பெற்றதற்குச் சான்றுகள் கிட்டியும் அம் மரபு தொல்காப்பியரால் சுட்டப் பெறவில்லை என்றும் கொள்ளலாம்.

குறளனாகிய ஒருவனைப் ‘பறழ்மகன்’ என்கிறது கலி (94). அப்பறழ் மகன் “ஆண்டலைக் கீன்ற பறழ்மகன்” எனப்படுகிறான். ஆண்டலைப் பறவைக்கு அதன் பெட்டையீன்ற பறழ் போலும் மகன் என்பது இதன் பொருளாம்.

“ஈன்றாள்” என்பது தாயைக் குறித்தல் வெளிப்படை. விலங்கு குட்டி போடுதல் ‘ஈனுதல்' எனப்படுதலும் வழக்கே. ஆனால் முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும் பறவைகளின்