உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

இளங்குமரனார் தமிழ் வளம்

16

'நன்றாற்ற லுள்ளும் தவறுண் டவரவர்

பண்பறிந் தாற்றாக் கடை'

நம்பிக்கையூட்டலுக்கு ஒருசான்று! நான் தவறு செய்து விட்டேனே என உணர்வாளன் ஒருவன் வருந்துகிறான். அதனை உள்ளுள் உணர்கிறார் வள்ளுவர். 'தவறு செய்தேன் என நீ வருந்தும் வருத்தமே இனித் தவறு செய்யேன் என்பதற்குரிய அறிகுறி. ஆதலால் நிகழ்ந்ததற்கு வருந்தற்க. இனி இப்படி ஒருமுறை நிகழாவண்ணம் எச்சரிக்கையாக இருந்து கொள்க. அவ்வாறு இருந்தால் உனக்கு இனிப் புண்பாடு ஏற்படவே ஏற்படாது! நீ போற்றிக் கொண்டு ஏற்றம் பெறுவாய் என்பதற்கு உன் இரங்குதலே சான்று' எனத் தட்டிக் கொடுக்கிறார்.

இப்படி நம்பிக்கையூட்டும் உரவோர் எத்தகு பட்டறிவாளர்! உலகியல் உளவியல் அறிந்த திறவோர்! அவர் உரைப்பது:

66

எற்றுஎன்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றுஅன்ன செய்யாமை நன்று”

வள்ளுவம் வாழ்வு நூல்! வாழ்வார்க்கென, வாழ்ந்த பெருமகனாரால் வழங்கப்பட்ட நூல் - என்பதை எழுவாய் முதல் இறுவாய் முடியக் காட்டி நிற்கும் நூல்! வாழ்வார்க்கு வானம் பயந்ததென அது வளம் செய்யினும், அவ்வளத்தை அள்ளிக் கொண்டு அரவணைத்தவருக்குத் தானே பயன்?

2. உதிர் மலர்

முகிழம்

விண்வெளிக் கூண்டில் தங்குவார் உணவெல்லாம் சில 'ஊட்ட முகிழங்களே' (மாத்திரைகளே). அம் முகிழங்கள் அனையவாய், வாழ்வியல் நுண்மைகளையெல்லாம் திரட்டி வைத்த நூல் திருக்குறள்!

விரலாழி

கைவிரல் ஆழியில் (மோதிரத்தில்) வானொலிப் பொறியை ஆக்குகிறது அறிவியல் நுட்பம். மெய்யியல் வாழ்வெல்லாம் காழுமையாகக் குறட்பா ஆழியில் தேக்கி வைத்தது திரு வள்ளுவர் தேர்ச்சி!