உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் பொருள்

9

பழத்தோப்பு

உலகத்துப் பழ மரங்கள் எத்தனை! எத்தனை! அத்தனை பழவகை மரங்களும் ஓரிடத்து ஒரு தோப்பாய் ஒழுங்குற அமைந்து, உரிமையால் கொள்ள வைத்தால் எத்தகு நலமாம்! அத்தகு நலங்களை ஒருங்கே தருவது திருக்குறள்!

பூங்கா

விந்தைமிகு பூங்கா திருக்குறள்! அனைத்தும் அனைத்தும் வாடாச் செடிகொடி மலர்களால் அமைந்த பூங்கா! எங்கும் புகுவாய்! எங்கும் கட்டிலா உரிமை! காலம் நேரம் காவல் இல்லாத் தனிப் பெரும் பூங்கா! ஆர்வக் கட்டணம் ஒன்றன்றி அயற்கட்டணம் அறியா அருமைப் பூங்கா!

உலக வங்கி

முதலும் தரும்! வட்டியும் தரும்! வட்டிக்கு வட்டியும் வாரி வழங்கும்! உள்ளூர்த் தேவையா, உலகத் தேவையா எங்கும் உட னிருந்தும், உடன்வந்தும், ஒன்றியிருந்தும், உழுவலன்புடன் நினைத்தபோது எல்லாம் நினைவார் நினைவின் எல்லை யளவுக்கு நெடுகிலும் நேயத்தால் உதவும் நிகரிலா உலக வங்கி திருக்குறள்! ஆளர் இன்றி, ஆளாளுக்கெடுத்துக் கொள்ளவும், ஆரார்க்கும் வழங்கவும் அமைந்த ஒப்பற்ற உலக வங்கி! கோடை வாழ்விடம்

வாழ்வுக் கானலில் வாட்டுதல் எள்ளளவும் இல்லாமல், வேண்டும் நலங்களெல்லாம் வேண்டும் வேண்டுமாற்றான் வழங்கும் வளப்பெருங் 'கோடைவாழ்’, தொடர்மலை வள்ளுவர் செய்திருக்குறளேயாம்.

பேராழி

ஆழ்ந்துபட்டு அல்லல் அடையாமல், மூழ்குதலுக்கு மூச்சு அடக்காமல், வீழ்ந்துபட்டு விதிர்ப்பு அடையாமல், தாழ்ந்து தாழ்ந்து தானே முன்வந்து தகவார்ந்த ஆழ்கடல் வளமெல்லாம் அள்ளி அள்ளி வழங்கும் வாய்மைப் ‘பேராழி' வள்ளுவர் செய் குறளே!

ஊட்டகம்

நோய்க்கு மருந்துமாகிச், சுவைக்கு விருந்துமாகித் தனித் தனித் தகவுடன் வழங்கும் தவப்பேர் 'ஊட்டகம்” தமிழ்த் திருக்குறளே!