உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் – பொருள்

11

இன்றில்லையோ? உண்டு! உண்டு! இன்றும் உண்டு! என்றும் உண்டு! அது திருக்குறளாம் அமுதசுரபி! வானின்று உலகம் வழங்கிவரும் அமுதமழை போல, மண்ணின் மதி நலச் சுரப்பெல்லாம் ஒருங்கு வாய்ந்த அமுதமழை பொழியும் சுரபி! உள்ளுதோறும், உள்ளுதோறும் உள்ளத்தே சுவை ஊற்றெடுத்து உவப்புறுத்தும் அமுதசுரபி! எண்ணியவாறு எய்தத் தமிழ் மண்ணிலே வாய்த்த அமுத சுரபி!

இல்லாதது இல்லை

ஒன்றிருந்தால் ஒன்றில்லை என்பர்.

சுவையிருந்தால் கருத்தில்லை; கருத்திருந்தால் சுவையில்லை; செறிவு இருந்தால் புரிவில்லை; புரிவிருந்தால் செறிவில்லை; தெளிவிருந்தால் திருத்தமில்லை; திருத்தமிருந்தால்

தெளிவில்லை;

வாழ்வு இருந்தால் வனப்பில்லை; வனப்பிருந்தால் வாழ்வில்லை;

கற்பனை இருந்தால் அடிப்படையில்லை; அடிப்படை இருந்தால் கற்பனை இல்லை;

பழமை இருந்தால் புதுமை இல்லை; புதுமை இருந்தால் பழமை இல்லை;

பண்பாடு இருந்தால் பயன்பாடில்லை; பயன்பாடிருந்தால் பண்பாடு இல்லை;

இப்படி ஒன்றிருந்தால் ஒன்றில்லை என்பது பிற பிற நூல்களுக்கு. திருக்குறளுக்கு அன்று! வேண்டுவன வெல்லாம் ஈண்டியமைந்தது இன்பத் திருக்குறள்!

உணர்வுப் படப்பிடிப்பு

உணர்வுகளை ஊடுருவிக் காட்டும் ஒளிப்படம் திருக்குறள்! அதிலுள்ள ஒளிப்படங்கள் ஒன்றா? இரண்டா? கற்பார் அனைவர் ஒளிப்படங்களுமன்றோ கைம்மேல் வைத்துக் காணக் காட்டுகிறார் வள்ளுவர்! உடலைப் படம் பிடித்தல் உள்ளுறுப்பைப் படம் பிடித்தல் ஆகியவற்றை வியந்து மதிக்கும் உலகம், உணர்வுப் படப்பிடிப்பாளியை மதிக்கின்றதா? போற்றுகின்றதா?