உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

மறை என்னும் வழக்குண்மை 'நரம்பின் மறை' என்னும் தொல்காப்பிய ஆட்சியால் விளங்கும். நரம்பின் மறை யாழிசை நூலாம்.

தமிழில் வழங்கும் மறை என்னும் சொல்லின் பொருளைத் தொல்காப்பியம் தெளிவாக்குகின்றது. நிறை மொழி மாந்தரால் ஆணையிட்டுக் கூறப்படுவதே மறை மொழி. மந்திரம் மை ற என்பதுவும் அதுவே என்பது தொல்காப்பியர் கருத்து.

“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப.'

என்பது அவர் வாக்கு (1434)

“நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்”

என்றார் திருவள்ளுவர்.

(குறள் - 28)

இவண் குறிக்கப்பட்ட நிறைமொழி மாந்தர் தகைமையை எண்ண வேண்டும்! நிறைமொழி கூறுவார் எவர்? அவர் நிறை நெஞ்சர் என்க. நெஞ்சின் ஊர்தி சொல்லே! ஆதலால், நிறை நெஞ்சில் இருந்தே நிறைமொழி தோன்றும் என்க! குறை நெஞ்சில் இருந்து நிறைமொழி தோன்றாது என்பது வெளிப்படையாம் என்க.

நிறை நெஞ்சின் தனிமூலம், மனத்துக்கண் மாசின்மையாம். அம்மாசிலா நெஞ்சிலேதான் அழுக்காறு இல்லை; அவா இல்லை; வெகுளி இல்லை; இன்னாச் சால் இல்லை! நிலையிற்றிரியாது அடங்கிய தோற்றமும், குணமென்னும் குன்றேறி நிற்கும் பெற்றிமையும் நிறைமொழி மாந்தர் வரையறை. நிறைமொழி மாந்தர் கூறும் மறைமொழி எத்தகையது? இதனைச் செய்க; இதனைச் செய்யாதே" என ஆணையிட்டுக் கூறும் அத்தகையதே நிறைமொழி மாந்தர் கூறும் மறை மொழியாம்.

66

ஆணையிட்டுக் கூறப்படும் ஒன்று ஒளித்து மறைத்துக் கூறுவது ஆகுமா?

மறை என்பதன் மெய்ப்பொருள் ‘பாதுகாப்பு' என்பதாம். அல்நெறி ஈது; நல்நெறி ஈது; இதனைத் தள்ளுக; இதனைக் கொள்ளுக,' எனப் பாதுகாத்துக் கூறுவதே மறை மொழியாம்.