உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

15

இப்பாதுகாப்பும் அகக்காப்பும், புறக்காப்புமென இரு

வகைத்தாம். தந்நாட்டு கொள்ளுவன கொண்டு தள்ளுவன தள்ளல் அகக்காப்பாம். பிறநாட்டவர் வழக்குகளாக உள்ளனவும் நம் நடைமுறைக்கு ஆகாதனவுமாகியவற்றை விலக்குவது புறக்காப்பாம். இத்தகைய வற்றைப் பறையறைவது போலவும் அறை கூவுவது போலவும் கூறாமல் மறைத்துக் கூறுவதால் ஆகும் பயன் தான் என்ன?

வழ க்குகளாக உள்ளனவற்றுள்

மறை என்பதற்குக் 'காவல்' என்னும் பொருள் உண்டா?

குடைக்கு ஒரு பெயர் 'வெயின்மறை' என்பது. வெயிற் கொடுமை வாட்டா வண்ணம் காப்பதால் குடை 'வெயின் மறை’ ஆயிற்று. நாட்டவர்க்கு வெங்கொடுமை வாரா வண்ணம் காப்பதற்குச் சான்றாகவே முடியுடை வேந்தர் குடையுடையோராய்த் திகழ்ந்தனர் என்க. (புறம் 35 : 60)

வீட்டுக்கு ஒரு பெயர் 'வளிமறை' என்பது. கொடுங் கோடையோ, கடும் வாடையோ வருத்தாவண்ணம் கதவமைந்த வீடே ‘வளிமறை' எனப்பட்டதாம், வளி-காற்று.

(புறம். 196)

போர்க்களத்தில் பகைவர் விடுக்கும் படை துளைக்கா வண்ணம் அணியும் கவசத்திற்கு, 'மெய்ம்மறை' என்பது பெயர். பதிற்றுப்பத்து 'மெய்புகு கருவி’ (14), 'மெய்புதை அரணம்’ (52) என வழங்கும். வீரருக்கு வீரராக விளங்கி முன்னின்று காக்கும் மொய்ம்புடையாரைச் 'சான்றோர் மெய்ம் மறை' (14, 58) என்றும் 'மழவர் மெய்ம்மறை' (55, 58) என்றும், 'வில்லோர் மெய்ம்மறை’ (59, 65) என்றும் பதிற்றுப்பத்து பயில வழங்குகின்றது.

நாட்டின் காவலுக்கு அரணங்கள் இருப்பது போல, பண்பாடு நாகரிகம் இவற்றின் காவலுக்கு அரணமாக இருப்பது ‘மறை’ என்க!

தமிழ்மறை எனவும், பொதுமறை எனவும் வழங்கும் நம்மறையாம் திருக்குறளை மேலோட்டமாகக் காண்போரும் அல்லவற்றை மறுத்து, மறுத்துக் கூறும் நெறி முறையை நன்கு அறிவர். நல்லவற்றைக் கூறுதலினும், அல்லவற்றை மறுத்தல் கட்டாயத் தேவையாம். அதுவே காவற் கடனில் தலைப்பட்ட நிலைப்பாடு உடையதாம். ஆதலால் அறுப்பது, அறை; இறுப்பது, இறை; பொறுப்பது, பொறை; நிறுப்பது நிறை என்னும் சொல்லாட்சி போல மறுப்பது, மறை எனப்பட்டதாம் என்க.

,