உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

இளங்குமரனார் தமிழ் வளம்

16

உலகு படைத்தவன் எனின், இறைவன் அல்லது கடவுள் எனப்பொருள் கொள்ளலாம். படைத்தல், காத்தல், அழித்தல் என்பனவே இறைவன் விளையாட்டாகச் செய்வன என்பர். ஐந்தொழில் என்று வளர்ப்பினும் அவையும் இம்முத் தொழிலுள் அடங்குவனவே. படைத்தலை உளதாக்கல் என்றும் கூறுவர். ஆனால் இயற்றுதல் என எவரும் கூறார்! கூறியதிலர்.

நூல் இயற்றுதல், சட்டம் இயற்றுதல் என்பனவே மரபு. ஆதலால், உலகியற்றியான் என்பது இறைவனைக் குறிப்பது அன்று எனத் தெளியலாம். அவ்வாறானால் உலகொடு இயற்றுதல் எப்படிப் பொருந்தும் எனின், உலக நடைமுறை அல்லது விதி என்பதே ‘உலகு' என்பதன் பொருளாகும்.

"புதியதோர் உலகு செய்வோம்” என்று பாவேந்தர் பாடினார். உலகு செய்தல் என்பது உலக நடைமுறை விதியைச் செய்தலே. இதனை, "இனி ஒரு விதி செய்வோம் - அதை எந்த நாளும் காப்போம்” என்னும் பாரதியார் பாடல் கொண்டு தெளிவு செய்யலாம்.

இவற்றால் இயற்றியான் என்பதை விதி அல்லது சட்டம் இயற்றும் வேந்தனொடு சார்த்திக் கூற வேண்டியதே அன்றி, இறையொடும் இயக்கத்தக்க முறைமை இல்லையாம்.

உலகு என்பது உலகியலை நடப்பிக்கத் தக்க அரசியல், அறிவியல், பொருளியல் சட்டங்களே எனக் கொண்டு, ஒருவன் இரந்தும், உயிர் வாழ வேண்டும் என்னும் நிலையில் சட்டத்தை வேந்தனொருவன் இயற்றுவானேயானால், அவ்வேந்தன் இவ் வுலகைவிட்டே ஒழிந்து போவானாக என்று சாவித்தார் வள்ளுவர் என்று கருதுதலே தகும்.

கடவுளுக்கு ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், ஐந்தவித்தான், உவமை இல்லான், அறவாழி அந்தணன், எண்குணத்தான், இறைவன் என்னும் பெயர்களை வழங்கிய வள்ளுவர், 'இயற்றியான்' என வழங்கினார் அல்லர் என்பதைக் கருதலாம். அதே பொழுதில் அப்பெயரை மன்னனுக்கு வழங்கினார் என்பதும் தெளிவாகுமானால், ஐயத்திற்கு இடமில்லையே!

வேந்தன் கொண்டிருக்க வேண்டிய வலிய திறங்கள் நான்கு. அவற்றுள் தலையாய ஒன்று, இயற்றுதல் : இதனை,