உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

தமிழ் வளம் பொருள்

39

ல்வாழ்வான்’ ‘மூவர்” என்றவுடனே தமிழ்நெறியை அறவே மறந்து தொல்காப்பியம் திருக்குறள் தோன்றிய தமிழ்கூறு நல்லுலக வழக்கியலைத் துறந்து - எட்டாத வட்டத்திற்கு இட்டுக் கட்டி உரை கூறுவதே ஏற்றமெனப் பழைய உரையாசிரியன்மார் சென்றனர். பின்னை உரையாசிரியன்மாரும் அவர் வழியே வழியாகச் சென்றனர். அவ்வுரை ஏற்காதென மறுப்போரும் மயக்கறுக்க மாட்டாமல் பலப்பல கூறினர். மெய்யுரை கண்டாரும் நிலைநாட்ட வலுவற்று ஐயுற்றனர்! இயல்புடைய மூவர்' இயல்பு இவ்வாறாயிற்று!

‘வேந்தன் சுற்றத்தார் துறவோர்' என்பதொரு புத்துரை. ‘மாணவர் தொண்டர் அறிவர்' என்பதொரு புத்துரை. ‘பார்ப்பனர் அரசர் வணிகர்' என்பதொரு புத்துரை. 'தாய் தந்தை மனையாள் எனலுமாம்' என்பதொரு புத்துரை.

‘சைவர் வைணவர் வைதிகர்' என்பதொரு புத்துரை.

‘ஊர் மன்றத்தார் மூவர்' என்பதொரு புத்துரை,

இவ்வாறே இன்னும் பலப்பல புத்துரைகள். பழைய உரைகளோ மூவரை, 'பிரமசாரி, வானப்பிரத்தன், சந்நியாசி' என்னும். இவருள், 'இயல்புடைய மூவரை’ எவரெனலாம்?

மூவரைக் காண்டற்குச் சேக்கிழார் வழி காட்டுகிறார். வள்ளுவர் வாக்கு வழியிலேயே வழி காட்டுகிறார்! ஆதலால், எளிதாகப் பற்றிக் கொள்ள வாய்க்கின்றது. ஆனால் இருவரை மட்டுமே அவர் காட்டுகிறார்! இன்னொருவரைத் தேடிப் பிடிக்க வேண்டுமே! அதற்கு இளங்கோவடிகள் உதவுகின்றார். இவ் விருவர்க்கும் மேலாக வள்ளுவரே அழுத்தமாகத் தம் சொல்லாட்சியால் நிலை நாட்டி மெய்ப்பிக்கிறார். நூலாசிரியர் வழியிலேயே நூலுக்கு உரை காண்டலே சிக்கலற்றதும் செவ்விதானதும் ஆம்.

பெரியபுராணத்தில் அப்பூதியடிகள் புராணம் என்ப தொன்றாம். அதிலுள்ள செய்தியே ‘இயல்பு' அரண்.

அப்பூதியடிகளார் வளமனையில், நாவுக்கரசர் விருந்து உண்ணத் தொடங்கு முன், தம் வழக்கப்படியே நீறணிந்து கொள்கின்றார். வளமனையார்க்கும் முறை முறையே நீறு நல்குகின்றார். எப்படி?