உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

11

பரிபாடல்கள் எழுபதும் திருமால் செவ்வேள், வையை என்னும் முப்பொருள் பற்றியவையாக இருந்தன. இவற்றை அடைவு செய்தற்கு முன்னின்றது பண்! ஆகவே பாலை, நோதிறம், காந்தாரம் முதலியவாகப் பண்ணடைவில் அவற்றை ஒழுங்கு செய்து பரிபாடல் எனப் பெயர் சூட்டினர்.

எஞ்சிய அகவற் பாடல்களோ மிக்கிருந்தன. அவற்றை அகம், புறம் எனத் திணை குறித்து இருபாற் படுத்தலாம்! இவ் வெண்ணத் தால் பார்ப்பினும் அகப்பாடல்கள் எண்ணிக்கை ஒரு நூற்குட்படுவ தாக இல்லை. அப்பொழுது நல்லிசைப் புலவர் நெஞ்சத்தே ‘அடியளவு’ என்னும் ஓர் அளவுகோல் கிடைத்தது. அன்றியும் ஒரு திணை பற்றியோ, ஒருவரைப் பற்றியோ தொகையாகப் பாடிய பாடல்களைத் தனியே நூறு பாட்டாய் ஐந்திணைக்கும் ஐந்நூறு பாடல்களைக் கொண்ட ஐங்குறு நூற்றை அடியளவைக் கோல் இன்றி ஒதுக்கவும், பத்துப் புலவர்கள் பத்துச் சேர வேந்தர்களைப் பப்பத்துப் பாடலாகப் பாடிய பதிற்றுப்பத்தை ஒதுக்கவும் அவற்றைத் தனித்தனி நூலாக்கவும் வாய்ப்பாயிற்று. இன்னும் எஞ்சி யிருப்பவற்றுள் புறப்பாடல்கள் நானூறு இருந்தன. அவற்றைப் புறநானூறு என்னும் பெயரால் தொகையாக்கினர்.

இன்னும் எஞ்சிய பாடல்கள் அடியளவு கருதித் தொகுக்கப் பெற்றன. நான்கு முதல் எட்டடியீறான பாடல்கள் நானூறும், ஒன்பதடி முதல் பன்னீரடியீறான பாடல்கள் நானூறும், பதின் மூன்றடி முதல் முப்பத்தோரடியீறான பாடல்கள் நானூறும் ஆக 1200 பாடல்கள் இருக்கக் கண்டு அவற்றை முறையே குறுந்தொகை நானூறு, நற்றிணை நானூறு, நெடுந்தொகை அல்லது அகநானூறு எனப் பெயர் சூட்டினர்.

இவ்வளவுடன் சங்கப் பாடல்களின் தொகுப்பு முடிந்து விடவில்லை. பத்து நெடும்பாட்டுக்கள் எஞ்சி நின்றன. அவற்றை அகம் புறம் என்னும் பொருள் கருதாமல் பாடல் நெடுமை கருதி ஒரு தொகை யாக்கிப் பத்துப் பாட்டெனப் பெயர் சூட்டினர்.

நாலடி முதல் எட்டடியீறான பாடல்கள் நானூற்றைச் செங்கல் போல அடுக்கி விடக் கூடுமா? அதற்கும் அடங்கன் முறை